டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றவர்கள் உட்பட 148 இந்திய விளையாட்டு வீரர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
148 வீரர்களில், 17 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்டுள்ளனர். மீதமுள்ள 131 வீரர்கள் முதல் டோஸ் எடுத்துக் கொண்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரிந்தர் பத்ரா கூறியுள்ளார். இந்த 148 வீரர்களில் வரும் ஜூலை 23-ம் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கக்கூடிய வீரர்களும் அடங்குவர்.
இவர்களைத் தவிர பாராலிம்பிக்ஸில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளவர்களில் 13 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அதேவேளையில் இருவர் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். பாராலிம்பிக்ஸ் ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்குகிறது.
பாரா தடகள வீரர்களையும் சேர்த்து மே 20-ம் தேதி வரை மொத்தம் 163 வீரர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அதேநேரம் ஒலிம்பிக் போட்டி தொடர்பான பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளில் 87 பேர் முதல் டோஸும் 23 பேர் இரண்டு டோஸும் எடுத்துக் கொண் டுள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இதுவரை 90-க்கும் மேற்பட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இத்தாலியை மையமாக கொண்டு சிறப்பு பயிற்சி பெற்று வரும் தமிழகத்தைச் சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி முதல் தடுப்பூசியை நேற்று எடுத்துக்கொண்டார். இது தொடர்பான படத்தை அவர் தனது ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.