கொரோனாவின் புதிய வகைகள் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் கனடா, இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து நேரடி விமானங்களுக்கான தடையை ஜூன் 21 வரை நீட்டித்துள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30’ஆம் தேதி முதல் விதிக்கப்பட்ட முந்தைய 30 நாள் தடை இன்றுடன் காலாவதி ஆகும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து விமானங்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டது என்று கனடா தெரிவித்துள்ளது.
எனினும், தடுப்பூசிகள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதிகளை பராமரிக்க சரக்கு விமானங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இரு நாடுகளிலிருந்தும் நேரடி விமானங்களுக்கு மட்டுமே இந்தத் தடை பொருந்தும் என்பதால், மூன்றாவது நாடு வழியாக வருவதன் மூலம் பயணிகள் இந்தியா அல்லது பாகிஸ்தானிலிருந்து கனடாவுக்கு செல்ல முடியும். கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் புறப்பட்ட கடைசி இடத்தில் எடுக்கப்பட்ட கொரோனா எதிர்மறை சான்றிதழை அவர்கள் வைத்திருக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மந்திரி ஒமர் அல்காப்ரா, அரசாங்கத்தின் தொற்றுநோய்க் கூட்டத்தில், “கொரோனா மற்றும் அதன் வகைகளின் இறக்குமதி அபாயத்தைக் குறைப்பதற்கான பொது சுகாதார ஆலோசனையின் அடிப்படையில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
“இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டதிலிருந்து சர்வதேச விமானங்களில் இருந்து வரும் கொரோனாவின் நேர்மறையான நிகழ்வுகளின் எண்ணிக்கையில் கணிசமான குறைப்பை நாங்கள் கண்டிருக்கிறோம் என்று நான் கூற முடியும்.” என்று அவர் கூறினார்.