கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசாங்கம் பயணம் கட்டுப்பாட்டை விதித்தாலும் மக்கள் வழங்கும் பூரண ஒத்துழைப்பின் மூலமே கொரோனா தொற்றினை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முகமாக யாழ் மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் என்ற ரீதியில்
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளோம் என்பதை உறுதியாக கூற முடியும்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா முதலாவது அலை இரண்டாவது அலை மூன்றாவது அலையின் போது பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் முகமாக ராணுவத்தினர் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து இருந்தார்கள்.
அதேபோல தற்போதும் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக ராணுவத்தினரால் உரிய சகல பாதுகாப்பு முன்னெடுப்புகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில் பூரண ஒத்துழைப்பினை வழங்குமிடத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியும் எனவும் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி தெரிவித்தார்.