ரஜினிகாந்த் ‘அண்ணாத்தே’ படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்றுள்ளார். ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்தப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பு இடைவேளையில் நண்பர் மோகன்பாபுவைச் சந்தித்தார் ரஜினிகாந்த். இந்தச் சந்திப்பில் இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இவர்கள் சந்திப்பின்போது உடன் இருந்த மோகன்பாபுவின் மகள் லக்ஷ்மி மஞ்சு, இருவரின் நட்பு குறித்து நெகிழ்ச்சியோடு ட்வீட் செய்துள்ளார்.
“இவ்வளவு வருடங்களில் நட்பு என்பதற்கு எனக்குக் கிடைத்த அர்த்தம் வேறு. நம்முடன் நண்பர்களாகவே வளர்ந்தவர்கள் இப்போது உங்கள் நண்பர்கள் அல்ல. திடீரென எங்கேயோ சந்திக்கும் நபர்கள் இன்றுவரை நண்பர்களாக இருப்பார்கள். ஆனால், இவர்கள் இருவரையும் (மோகன்பாபு – ரஜினிகாந்த்) பார்க்கும்போது நீண்டகால நட்புக்கான நம்பிக்கை எனக்குக் கிடைக்கிறது.
ஒரு கோப்பை தேநீரைப் பகிர்ந்ததிலிருந்து, கார் ஷெட்களில் வசித்த காலம் வரை, இருவருமே மிக எளிமையான குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். இன்று இருவருமே அவரவர் இடங்களில் உச்சத்தில் இருப்பவர்கள். ஆனால், இன்றும் கூட ஒருவரை ஒருவர் சந்திக்க நேரம் ஒதுக்குகின்றனர். ஒருவருக்குப் பிரச்சினையென்றால் மற்றொருவர் உடனே அழைத்துப் பேசுகிறார்.
நாங்கள் எல்லாம் அவர்களைச் சுற்றியே இருந்ததால் எங்களை விட்டு விலகி இருவரும் நடந்துவிட்டு வந்ததைப் பார்க்கும்போது அழகாக இருந்தது. அவர்கள் என்ன பேசினார்கள் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். ஆனால், இந்த நட்பைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற தூய்மையான, ஆழமான, இணக்கமான நட்பு எனக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று லக்ஷ்மி மஞ்சு ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக, இன்று காலை இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு பகிர்ந்திருந்தார்.