நாட்டில் நேற்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 4 மணிவரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்தது.
நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியில் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
இதனால் நகர் பகுதிகளில் ஒரு சிலர் நடமாடுவதை காணக்கூடியதாக இருந்தது.
இதற்கிடையில் பயணக்கட்டுப்பாட்டைமீறி செயற்பட முற்பட்ட சிலர், பொலிஸாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு திரிப்பியனுப்பட்டனர். அத்துடன், முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய சிலர் கைதும் செய்யப்பட்டனர்.
மலையக நகர் பகுதி இவ்வாறு முடக்கப்பட்டிருந்தாலும் தோட்டப்பகுதிகளில் இயல்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் வேலைக்குச்சென்றனர். சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படவில்லை. இந்நிலை தொடருமானால் தோட்டப்பகுதிகளில் உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் இருப்பதாக மலையக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தாலும் நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளுக்கு செல்ல முடியும் என்பதுடன், அதற்காக விசேட அனுமதி எதுவும் தேவையில்லை.
–க.கிஷாந்தன்-