பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் ஆகிய இருவரையும் அ.இ.மக்கள் காங்கிரஸ்,கட்சியிலிருந்து நீக்கவுள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன. உண்மையில் இவ்விருவரும் மேற்படி அ.இ.மக்கள் காங்கிரசின் உறுப்பினர் பதவியில் உள்ளார்களா என்பது முக்கிய கேள்வியாகும்.
இஷாக் ரஹ்மான் கடந்த தேர்தலின் போது, தான் மக்கள் காங்கிரஸ் அல்ல சஜித்தின் கட்சிக்காரன் என மேடைகளில் சொல்லியிருந்தார். அதே போல் அலி சப்ரி ரஹீமும் பதிவு செய்யப்பட்ட தனிக்கட்சியின் பிரதிநிதியாகவே பாராளுமன்றத்தில் உள்ளார். கடந்த தேர்தலின் போது புத்தளத்துக்கு எம் பி கிடைக்க வேண்டும் என்பதற்காக மு.காவும் ம.காவும் வாடகைக்கு எடுத்த கட்சியில் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். அப்போதே நாம் கூறினோம் இது முரண்பாடுகளை உருவாக்கும் என ம.கா வினருக்கு சரியான அரசியல் அறிவு இருந்திருந்தால் வெற்றியோ தோல்வியோ அம்பாரை மாவட்டத்தில் தமது கட்சி சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தியது போல் புத்தளத்திலும் நிறுத்தியிருக்கலாம் என உலமா கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
பிரிந்து போட்டியிட்டால் பிரதிநிதித்துவம் கிடைக்காது என்றிருக்குமாயின் சுயேற்சையாக வேட்பாளர்களை நிறுத்தியிருக்கலாம். அதனை விடுத்து தனது எதிரியா நண்பனா என்று புரியாமல் உள்ள மு. காவின் உயர் பீட உறுப்பினர் ஒருவரின் கட்சியில் தன் வேட்பாளர்களையும் நிறுத்தியமை தவறாகும். ஒரு பொறுப்புள்ள கட்சி என்பது எம் பீக்கள் அதிகம் வேண்டும் என்பதை மட்டும் சிந்திக்க கூடாது. தரமான கட்டுப்பாடான தமது கட்சி எம் பீ க்கள் வேண்டும் என்றே நினைக்க வேண்டும். அதே போல் இஷாக் ரஹ்மான், தன்னை சஜித்தின் கட்சி என சொன்னபோது கட்சி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர் ம.காவை சேர்ந்தவர் என சொன்னால் சிங்கள மக்கள் ஓட்டு போடமாட்டார்கள் என்பதால் சஜித் கட்சி என சொல்கிறார் என ம.கா ஆதரவாளர்கள் எழுதினர்.
அப்படியாயின் சிங்கள மக்களுக்கு ஒரு முகமும் முஸ்லிம் மக்களுக்கு இன்னொரு முகத்தையும் காட்ட ஒரு முஸ்லிம் கட்சி துணை போகலாமா? இவ்வாறு செய்து விட்டு மேற்படி இருவரும் அரசுக்கு ஆதரவாக ஒரு முகத்தையும், எதிர்க்கட்சிக்கு ஆதரவாக இன்னொரு முகத்தையும் காட்டுவதற்கு கற்றுக்கொடுத்தது ம.காங்கிரஸ்தான். இந்த இருவரும் அரசுக்கு ஆதரவாக கை உயர்த்தியது சரியா பிழையா என்பது வேறு விடயம். அவர்களை பொறுத்த வரை அது சரியானது. ம.கா கட்சியை பொறுத்தவரை பிழையானது. பிழையானவர்கள் தெரிவு செய்யப்பட ஏன் கட்சி நடிக்க வேண்டும்.
புத்தளத்து எம் பி இப்போது பிழையானவர் என்றால் பிழையானவர் தெரிவு செய்யப்பட துணை போவது சரியா அல்லது எம் பி கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை நேர்மையான வழியில் நடப்பது சரியா? அலி சப்ரி செய்தது என்னைப்பொறுத்தவரை பெரும் தவறல்ல ஆனால் அவர் பிழை என்றால் பிழையான ஒருவரை தெரிவு செய்ய தேர்தலில் துணை போன ம. காவும் குற்றவாளியே.அரசியலில் நேர்மையும் தூய்மையும் இருக்க வேண்டும். ஆட்களின் எண்ணிக்கையில் அர்த்தம் இல்லை என்பதை உணர வேண்டும். ம. காவில் அனைவரும் தோற்று தலைவர் ரிசாத் மட்டும் வென்றிருந்தாலும் கட்சிக்கு கௌரவம் கிடைத்திருக்கும்.
2010ம் ஆண்டு எந்த அரசியல் பிரபலமும் மக்கள் காங்கிரசை பலப்படுத்த முன் வராத போது ஒரு கட்சியாக இணைந்து அதன் பிரதி கொள்கை பரப்பு செயலாளராக இருந்து கட்சியை நான் பிரபல்யப்படுத்தியது அரசியலுக்காக மக்களை ஏமாற்றும் முஸ்லிம் காங்கிரசுக்கு மாற்றீடாக மக்கள் காங்கிரசை கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான். கடைசியில் ம. காவும் மு. கா வழியில் செல்வது கவலை தருகிறது. ஆகவே மேற்படி இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் ம. கா கட்சியிலிருந்து நீக்குவதாக கட்சியால் அறிவிக்க முடியுமே தவிர இவர்களின் எம் பி பதவிகளைக்கூட கட்சியால் பறிக்க முடியாது. ஆனாலும் இச்செயல் ஜோக்காகவே அரசியல் வானில் பார்க்கப்படும்.
ஆகவே சம்பந்தப்பட்ட எம் பிமாரை கட்சி அழைத்து நேரடியாக பேச வேண்டும். 20ஐ எதிர்த்து அரசுக்கு சார்பான 20 ஏக்கு வாக்களித்த முஷர்ரப் எம் பியை இணைத்துக்கொண்டு செல்வது போல் அரசுக்கு ஆதரவான இவ்விருவரையும் இணைத்து கட்சி செல்ல வேண்டும். இல்லாமல் தலைவர் இல்லாத நிலையில் நேரத்துக்கொரு அறிக்கை வெளியிடுவதை வெறும் தலைப்புச்செய்திகளாகத்தான் இருக்குமே தவிர எந்த நன்மையும் சமூகத்துக்கு கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.