7 பேரை விடுதலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்துத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பியது.
அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் இருக்கிறது எனக் கூறி, தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையே பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையை வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்துத் தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். சென்னை, சத்தியமூர்த்திபவனில் கே.எஸ்.அழகிரி கூறும்போது, ‘எழுவர் விடுதலை குறித்து முதல்வர் கடிதம் எழுதியுள்ளதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருவது இதுதான். குற்றவாளிகள் யாரையும் மதத்தின் பெயரால், மொழியின் பெயரால், சாதியின் பெயரால், இனத்தின் பெயரால் பாகுபாடு பார்க்காதீர்கள்.
ஒருவருக்குத் தண்டனை அளிக்க வேண்டும் என்றாலும் சரி, அவருக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்றாலும் சரி, அதை நீதிமன்றங்கள் தான் செய்ய வேண்டும். அதைத் தவிர்த்து அரசியல் அழுத்தங்கள் கூடாது என்பது தமிழகக் காங்கிரஸ் கட்சியின் கொள்கை. இந்த அரசியல் அழுத்தங்கள் பிற்காலத்தில் பல விரும்பத்தகாத நிகழ்வுகளை சமூகத்தில் உருவாக்கும். சட்டம் ஒழுங்கு இல்லாமல் போகும்.
சட்டம் ஒழுங்கைப் பேணவே நீதிமன்றங்களும் காவல் துறையும் இருக்கின்றன. எனவே அவர்கள்தான் இதில் முடிவெடுக்க வேண்டும். ஒருவர் விடுதலை அடைவதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கவில்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 26 பேர் குற்றம்சாட்டப்பட்டு 19 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஏனெனில் நீதிமன்றம் சொன்னால் அது சரியாக இருக்கும் என்று கருதினோம். நீதிக்குத் தலைவணங்குகிறோம். ஏனெனில் அது நீதிமன்றத் தீர்ப்பு. அதேதான் இப்போதும் ஏற்பட வேண்டும் என்று கருதுகிறோம்.
தமிழகச் சிறைகளில் 100க்கும் மேற்பட்ட தமிழர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடுகிறார்கள். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சொன்னால் அது மனிதாபிமானம். ஆனால் 7 பேருக்கு மட்டும் விடுதலை கோருவது நியாயமல்ல’ என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.