மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள கடற்கரையில் மே 18 ஆம் திகதி முள்ளி வாய்க்காலில் இறந்த உறவினர்களையும், நண்பர்களையும் நினைவு கூர்ந்தமைக்காக பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உட்பட 10 பேரையும் எதிர்வரும் 03.06.2021 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனை உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 18 ஆம் திகதி செவ்வாய் கிழமை கிரான் கடற்கரையில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏற்பாட்டாளரான குருசுமுத்து வி.லவக்குமார் உட்பட 9 பேரும் கல்குடா பொலிசாரால் கைது செய்யப்பட்டு பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந் நபர்களை மாவட்ட நீதவான் நீதிமன்றம் வாழைச்சேனை நீதிபதி எம்.எச்.எம்.பசில் முன்னிலையில் இன்று பொலிசாரினால் முன்னிலைப்படுத்தப்பட்டது.
இதன்போது சாட்சியங்களை கேட்டறிந்து கொண்ட நீதிபதி சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இவ் வழக்கில் சந்தேக நபர்கள் சார்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி கே.சுகாஸ்,சட்டதரணி ரம்சின் மற்றும் சட்டத்தரணி ஜெயசிங்கம் ஆகியோர்கள் ஆஜராகியிருந்தனர்.
இதேவேளை இவ் வழக்கு தொடர்பாக சட்டத்தரணி கே.சுகாஸ் பின்வருமாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்-
ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்க்கின்ற போது இந் நாட்டிலே தமிழர்களாக பிறந்தமைக்கு வெட்க்கப்பட வேண்டிய வேதனைப்பட வேண்டிய நிலமையில் இருக்கின்றோம்.இறந்த உயிர்களை நினைவு கூறுகின்றமை தொடர்பாக இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட எல்.எல்.ஆர்.சி.அறிக்கை,சர்வதேச சட்டங்கள் மற்றும் அரசியல் அமைப்பிலே கூறப்படுகிறது.இவற்றுக்கு மாறாக பூனைகளை எல்லாம் இவ்வரசு புலிகளாக்கின்றது. துரதிஸ்ட வசமாக இவ் வழக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்துள்ள காரணத்தினால் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குகின்ற அதிகாரம் இவ் நீதவான் நீதிமன்றத்திற்கு கிடையாது.அகவே இவ் வழக்கினை இலங்கையின் உயர் நீதி மன்றத்திலே அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தார்.
![](https://pagetamil.com/wp-content/uploads/2021/05/S6760154.jpg)
![](https://pagetamil.com/wp-content/uploads/2021/05/IMG_20210521_130232-scaled.jpg)
![](https://pagetamil.com/wp-content/uploads/2021/05/IMG_20210521_130226-scaled.jpg)