வவுனியாவில் இன்று இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது ஐவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (21) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இவ் கைது சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஈரட்டை – வூபே பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடியில் வைத்து புத்தளத்திலிருந்து வவுனியா நோக்கி சென்ற ஹயஸ் ரக வாகனத்தை வழிமறித்து சோதனை மேற்கொண்ட போது அவர்களிடமிருந்து சிறியளவிலான ஹெரோயின் போதை பொருளை மீட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் 25, 26, 31, 34, 36 வயதுடையவர்கள் எனவும், நெளுக்குளம், கற்பகபுரம், ஈச்சங்குளம், மூன்றுமுறிப்பு, தேக்கவத்தை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப் பொருளையும், அவர்கள் பயணித்த வாகனமும் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்ட ஐவரிடமும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.