ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,920 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய சுகாதார மையம் தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,920 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாஸ்கோவில் மட்டும் 2,096 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 390 பேர் பலியாகினர்.
இதுவரை 49 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,16,965 பேர் பலியாகி உள்ளனர். 10% பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது. வளர்ந்த, வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களது தேவைக்கு அதிகமாகத் தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளன. ஏழை நாடுகளோ தடுப்பூசி கிடைக்காமல் திணறி வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி காப்புரிமையை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும் என்று அறிவியல் விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.