கிளிநொச்சி மாவட்டத்தின் நெத்தலியாறு சோதனைச்சாவடியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல். கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக கூறி, நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தர்மபுரம், நெத்தலியாறு பகுதியில் இராணுவத்தினர் இன்று வீதித்தடை அமைத்து, போக்குவரத்தை தடை செய்துள்ளனர்.
இதனால், முடக்கப்பட்ட பகுதிக்குள் உள்ள மக்கள் அவசர தேவைகள் கருதியும் வெளியில் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. கர்ப்பிணிகள், புற்றுநோயாளர்கள், சத்திரசிகிச்சைக்கு செல்பவர்கள் என பலர் வந்து, தொடர்ந்து பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
அந்த இடத்தில் இருந்த கிளிநொச்சி செய்தியாளர் தர்மலிங்கம் சிவா நிலைமையை நேரலையாக பதிவிட்டார்
அதில், கர்ப்பிணி பெண்ணொருவர் தன்னை தொடர்ந்து பயணிக்க முடியாதென வழிமறித்த இராணுவம், வீதியிலேயே குழந்தை பிரசவிக்குமாறு தெரிவித்ததாக கூறினார்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று கழுத்து பகுதியில் சத்திரசிகிச்சை நடைபெறவுள்ள பெண்ணொருவர், தெல்லிப்பளைக்கு சிகிச்சைக்கு வர வேண்டிய புற்றுநோயாளர் என பலர் வழிமறிக்கப்பட்டனர்.
இதனால் அங்கு கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டது.
நீண்ட இழுபறியின் பின்னர்- பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பின் பின்னர்- வைத்திய தேவைக்காக செல்பவர்கள் மட்டும், சோதனைச்சாவடியை கடக்க அனுமதிக்கப்பட்டனர்.