வாட்ஸ்அப்பின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கைகள் மே 15 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது. பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் பயனர்கள் புதிய சேவை விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கு மே 15 ஆம் திகதியே கடைசி என்று முன்னதாக அறிவித்திருந்ததை அடுத்து இந்த தனியுரிமைக் கொள்கைகள் அமலுக்கு வருகின்றன.
முதலில் பிப்ரவரி 8 ஆம் திகதி முதலே நடைமுறைக்கு வரவிருந்த இந்த தனியுரிமை கொள்கைகளால் பின்னடைவு சந்தித்ததை அடுத்து அதற்கான காலக்கெடுவை மே 15 ஆம் திகதி வரை நிறுவனம் ஒத்தி வைத்தது.
அதாவது வாட்ஸ்அப் பயனர்கள் புதிய சேவை விதிமுறைகளை ஏற்க வேண்டும் இல்லையென்றால் மே 15 க்கு பிறகு அவர்களின் கணக்கு வாட்ஸ்அப்பில் இருந்து நீக்கப்படும் என்றும் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது என்று முன்னதாக அறிவிப்பை வெளியிட்டது வாட்ஸ்அப்.
சற்று தந்திரமாக யோசித்த வாட்ஸ்அப் இப்போது எந்தவொரு கணக்கையும் அகற்றபோவதில்லை என்றும், ஆனால் தனியுரிமைக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத பயனர்களுக்கு விரைவில் சில அம்சங்களைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதாவது உங்களுக்கு வரும் குழு செய்திகளையோ அல்லது தனிப்பட்ட நபரிடம் இருந்து வரும் செய்திகளையோ பார்க்க முடியாமல் போகலாம், அதே போல ஸ்டேட்டஸைப் பார்ப்பதற்கான விருப்பமும் கூட தடை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. நீங்கள் வாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியும் ஆனால் உங்களுக்கு அனைத்து அம்சங்களும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
வாட்ஸ்அப் பயனர்கள் புதிய விதிமுறைகளை ஏற்காவிட்டால் குறைந்த அம்சங்களுடன் வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்த வேண்டி இருக்கும். இது சில வாரங்களுக்குப் பிறகு, இன்கமிங் அழைப்புகளுக்குத் தடை அல்லது அறிவிப்புகளைக் காண்பிக்காமல் இருப்பது போன்ற கட்டுப்பாடுகளையும் விதிக்கக்கூடும். இதனால், புதிய கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு பயனர்கள் ஆளாவார்கள்.
ஆனால் உங்களுக்கு வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமை கொள்கைகள் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தலாம். அவை வாட்ஸ்அப்பை விட கூடுதல் அம்சங்களுடன் கூடுதல் பாதுகாப்புடன் கிடைக்கும்.