நினைவுகூர்தல் உணர்வு பூர்வமானது மட்டுமல்ல எமது உரிமையும் கடமையுமானவையாகும். இதனை நாம் ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டும். அத்துடன் இது தொடர்பான விழிப்புணர்வை மற்றவர்க்கு ஏற்படுத்தவும் வேண்டும். என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் க.அருந்தவபாலன்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலையின் உச்சந்தொட்ட மே 18 ஆம் நாளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நினைவேந்தலைச் செய்வது எமது கடமையும் உரிமையுமாகும். அந்நாள் எமது உறவுகளை நினைவுகூர்வதற்கானது மட்டுமல்ல இனத்தின் இருப்புக்கும் உரிமைக்குங்கூட அவசியமான ஒருநாளுமாகும்.
ஆக்கிரமிப்பாளர்கள் எப்போதும் ஒரு இனத்தின் வரலாறுகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் அழிப்பதுடன் அவ்வினத்தின் எழுச்சியைத் தடுப்பதற்காக நினைவுச் சின்னங்களையும் நினைவு நிகழ்வுகளையும் தடுக்க எதேச்சதிகாரத்தைக் கையிலெடுப்பார்கள்.
அதையிட்டு நாம் பயந்து அடங்கி ஒடுங்க வேண்டிய அவசியமில்லை. சூழ்நிலைகளுக்கேற்ப அத்தடைகளை புதிய உத்திகளைக் கையாண்டு இன்னும் சிறப்பாக மாற்ற நாம் முயலவேண்டும்.
நினைவுகூர்தல் உணர்வு பூர்வமானது மட்டுமல்ல எமது உரிமையும் கடமையுமானவையாகும். இதனை நாம் ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டும். அத்துடன் இது தொடர்பான விழிப்புணர்வை மற்றவர்க்கு ஏற்படுத்தவும் வேண்டும்.
குறிப்பாக எமது இளையோருக்கு ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு எடுத்துச்சொல்வதன் மூலமும் நடத்தையின் மூலமும் ஏற்படுத்தினால் ஒட்டுமொத்த இளையோருக்கு ஏற்படுத்துவது போலாகும்.
இது தொடர்பாக வடக்கு கிழக்கு ஆயர் மன்றம், வடக்கு கிழக்கு கட்டமைப்புத் தலைவர் வேலன் சுவாமிகள் போன்றோர் விடுத்துள்ள வேண்டுகோள்களை ஏற்றுச்
செயற்படுவோம்.
அன்றையநாளில் ஆலயங்களில் மணிகளை ஒலிக்கச் செய்து வழிபடுவோம். மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலிப்போம். முள்ளிவாய்க்கால் கஞ்சியை உணவாகக் கொள்வோம்.
இவற்றை நாம் ஒவ்வொருவரும் தவறாது கடைப்பிடித்து தடுப்போர் கனவுகளைத் தவிடுபொடியாக்குவோம்.
இன்று எம்மில் கணிசமானோர் முகநூல், ருவிற்றரில் இணைந்துள்ளோம். ஒவ்வொருவருக்கும் ஆயிரமாயிரம் உள்நாட்டு வெளிநாட்டு நண்பர்கள் உள்ளனர். சகோதர இனநண்பர்களும் கணிசமாக உள்ளனர். எமது உரிமைக்கான உணர்வுகளை பயனுள்ள வகையில் வெளிப்டுத்துவதற்கு இதனைக் கையாள்வோம்.
நண்பர்களை வாழ்த்துவதற்கு மட்டுமல்ல எமது எதிர்கால வாழ்க்கைக்காகவும் ஒருமுறை பயன்படுத்துவோம். மே17,18 ஆம் நாள்களில் எங்கள் உணர்வுகளை எங்கள் பக்கத்தில் தவறாது பதிவிடுவோம். மற்றவர்களின்பதிவுகளையும் பகிர்ந்திடுவோம்.
நாம் உறுதியானவர்கள் என்பதை உலகுக்கு மீண்டும் சொல்லி வைப்போம் என தெரிவித்துள்ளார்.