ஜம்மு – காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் ஆள் இல்லா உளவு விமானங்களில் இருந்து போடப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதிக்குள் நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து ‘ட்ரோன்’கள் எனப்படும், ஆளில்லா சிறிய வகை விமானங்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் சமீப காலமாக தொடர்ந்து நடக்கின்றன.
இந்நிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது மீண்டும் அரங்கேறி உள்ளது. இது குறித்து பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,
ஜம்மு – காஷ்மீரின் சம்பா மாவட்ட எல்லைப் பகுதியில் மஞ்சள் நிற கவரில் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதனுடன் ட்ரோன்களில் எடைகளை தாங்க பொருத்தப்பட்டிருக்கும் மரச்சட்டமும் கண்டெடுக்கப்பட்டது. இதன் வாயிலாக, ட்ரோன் உதவியுடன் இந்த ஆயுதங்கள், அந்த பகுதியில் போடப்பட்டிருப்பது உறுதியாகிறது.
இந்த ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பாகிஸ்தான் எல்லைக்குள் அந்த ட்ரோன் மீண்டும் சென்றிருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.