கடந்த சில நாட்களாக காசா மற்று மேற்கு கரை பகுதியில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இதன் காரணமாக இரு தரப்பிலும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறும்போது, “ இஸ்ரேல் அரசு தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி அளிப்பதற்கும் உரிமை உண்டு, பாலஸ்தீனம் தன்னை பாதுகாத்து கொள்ளவும் உரிமை உண்டு. இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டியது அவசியம்” என்றார்.
நடந்தது என்ன?
பாலஸ்தீனர்கள் ஜெருசலேமில் அமைந்துள்ள அல் அக்ஸா மசூதியில் ரம்ஜானை முன்னிட்டு மே 8-ம் தேதி இரவில் தொழுகையில் ஈடுபட்டனர். சுமார் 90,000 பாலஸ்தீனர்கள் அப்பகுதியில் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த இஸ்ரேல் போலீஸார் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தாக்குதல் நடத்தியது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இருதரப்புக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடந்த தாக்குதலில், பாலஸ்தீனத்தில் 35 பேரும், இஸ்ரேலில் 5 பேரும் பலியாகினர்.