இந்திய வகை உருமாறிய கொரோனாவால் உலகத்துக்கே ஆபத்து என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பரவத்தொடங்கிய மும்முறை உருமாறிய கொரோனா வைரஸ் உலகத்துக்கே ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த மும்முறை உருமாறிய கொரோனாவுக்கு B-1617 என பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் டாக்டர் மரியா வான் கெர்கோவ் பேசியபோது, “இந்தியாவில் கண்டறியப்பட்ட B-1617 வகை எவ்வளவு வேகத்தில் பரவுகிறது என நமக்கு தெரியும். இந்த வைரஸ் பரவி வரும் இந்தியாவிலும் இதர நாடுகளிலும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
எங்களது குழுக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், வைரஸ் பரவும் வேகத்தின் அடிப்படையில் B-1617 உருமாறிய கொரோனா வைரஸ் உலகத்துக்கே ஆபத்தானது என வகைப்படுத்தியுள்ளோம்.
இந்த வைரஸ் குறித்து கூடுதல் தகவல்கள் தேவை. பல தொற்றுநோயியல் ஆய்வுகள் குறித்து தகவல்கள் தேவைப்படுகிறது. இந்த வைரஸ் பரவலை நமது சிகிச்சை முறைகளாலும், தடுப்பூசிகளாலும் தடுக்க முடியாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.