மலேசியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலுக்கு வருவதாக, பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் அறிவித்துள்ளார்.
இந்த புதிய நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மே 12 ஆம் திகதி முதல் ஜூன் 7ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.
அந்த உத்தரவின் கீழ் மாநிலம், மாவட்டம் கடப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
எனினும் அவசரத் தேவை, வேலை, சுகாதாரம், பொருளாதார நடவடிக்கை ஆகிய காரணங்களுக்காகவும், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காகவும் மக்கள் வெளியில் செல்ல அனுமதியளிக்கப்படும்.
திருமணம், திருமண நிச்சயதார்த்தம், அரசாங்க, தனியார் துறைகளின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் என சமூக ஒன்றுகூடல் நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படுகிறது.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கக் கூடிய மெதுவோட்டம், சைக்கிளோட்டம், உடற்பயிற்சி ஆகிய நடவடிக்கைகளைத் தவிர அனைத்து வகை விளையாட்டுப் போட்டிகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
அனைத்துலக தேர்வெழுதும் மாணவர்களைத் தவிர உயர் கல்வி கூடங்கள் அனைத்தும் மூடப்படும்.
பாலர் பள்ளிகளும், சிறார் பராமரிப்பு பள்ளிகளும் திறக்கப்பட்டிருக்கும்.
இவ்வேளையில், தனிநபர் வாகனங்களிலும், டக்சி , e-hailing போக்குவரத்து சேவையை வழங்கும் வாகனங்களிலும் மூவர் மட்டுமே பயணிக்க முடியும்.
உணவகங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதியளிக்கப்படாத நிலையில், உணவு விநியோகம் செய்யவும், drive thru முறையின் கீழ் உணவை வாங்கவும் அனுமதியளிக்கப்படுகிறது.
இதனிடையே , இந்த அவசர கால கட்டத்தில் தொழிலாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் உத்தரவை முதலாளிகள் கட்டாயம் அமல்படுத்த வேண்டும்.<
ஹரி ராயா பெருநாளின் போது , உறவினர்கள் வீட்டிற்கு செல்லவும், கல்லறைக்குச் செல்லவும் அனுமதியில்லை.
முஸ்லீம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தளங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். அந்த கட்டுப்பாடுகளை ஒருமைப்பாட்டு அமைச்சு வெளியிடும்.
மாநிலம், மாவட்டம் கடப்பதற்கான தடையும், சமூகம், விளையாட்டு, கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையும் நேற்று முதல் அமுலானது.
பிரதமர் அறிவித்திருக்கும் இதர தடை உத்தரவுகள் அனைத்தும் மே 12 ஆம் திகதியிலிருந்து ஜூன் 7 ஆம் திகதி வரை அமலில் இருக்கும்.
இந்த காலகட்டத்தில் அனைத்து பொருளாதார துறைகளும் செயல்பட அனுமதிக்கப்படுமென பிரதமர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.