தமிழகத்தின் சிவகங்கை பகுதியை சேர்ந்த குணசேகரன் மணிகண்டன் (26), சிங்கப்பூரில் நில ஆய்வு உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 18ம் தேதி சிங்கப்பூரின் அங் மோ கியோ அவென்யூ பகுதியில் பார்வையற்ற முதியவர் சாலையை கடக்க முடியாமல் தவித்து கொண்டிருந்தார். இதை பார்த்த குணசேகரன் மணிகண்டன், அந்த முதியவரை கைப்பிடித்து அழைத்து சென்று பாதுகாப்பாக சாலையை கடக்க செய்தார்.
மேலும் அவரது விருப்பப்படி மருத்துவமனையில் கொண்டுபோய் விட்டார். இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதுவரை 2.8 லட்சம் பேர் வீடியோவை பார்த்துள்ளனர். சிங்கப்பூர் அரசின் மனித சக்தி துறையின் கீழ் இயங்கும் ‘ஏஸ்’ அமைப்பின் அதிகாரிகள், சமூகவலைதள வீடியோவை ஆதாரமாகக் கொண்டு குணசேகரன் மணிகண்டனை கண்டுபிடித்தனர். சிங்கப்பூர் அரசு சார்பில் அவரை கவுரவித்து அன்பளிப்பையும் வழங்கினர்.
இதுகுறித்து குணசேகரன்மணிகண்டன் கூறும்போது, ‘முடிந்தவரை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எனது பெற்றோர் எனக்கு அறிவுரை கூறியுள்ளனர். அந்த அறிவுரையை இப்போதும் கடைபிடித்து வருகிறேன். அரசு சார்பில் அளிக்கப்பட்ட அன்பளிப்புகளை நண்பர்களோடு பகிர்ந்து கொண்டேன். எனது வீடியோவை அம்மா, அப்பா, சகோதரர், உறவினர்கள் பார்த்து பாராட்டு தெரிவித்தனர்’ என்று தெரிவித்தார்.