நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை அவர்களின் வீடுகளுக்குச் செல்ல அனுமதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கிளிநொச்சி வளாக பீடாதிபதிகளின் அவசர கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடர்பில், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு :
நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில் நுட்ப பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை வீடுகளுக்குச் செல்ல அனுமதிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கிளிநொச்சி வளாக பீடாதிபதிகளின் அவசர கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. எனினும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களையும், ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மாணவர்களையும் அவர்களின் பரீட்சைகள் முடியும் வரை விடுதிகளில் தங்கியிருப்பதற்கு அனுமதிப்பதென இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில் நுட்ப பீடங்களைச் சேர்ந்த சுமார் 1500 மாணவர்கள் விடுதிகளில் தங்கி கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் அனைவரும் சுகாதரத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே விடுதிகளில் தங்கிக் கல்விச் செயற்பாடுகளைத் தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் கிரமமாக எழுமாற்று பி.சி.ஆர். பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இது வரை இவர்களில் எந்தவொரு தொற்றாளரும் அடையாளப்படுத்தப்படவில்லை. ஆனாலும் வடக்கு மாகாணத்திலும், நாடெங்கிலும் எழுந்துள்ள நிலைமைகளை அடுத்து மாணவர்களை வீடுகளுக்கு அனுப்புவதற்கு பீடாதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பரீட்சைகளுக்குத் தோற்றும் தொழில் நுட்ப பீடத்தைச் சேர்ந்த இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்கள் 205 பேரும், பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு மாணவர்கள் 125 பேரும், விவசாய பீடத்தைச் சேர்ந்த 140 பேருமாக 470 மாணவர்கள் மட்டும் அவர்களின் சுய விருப்பின் பேரில் விடுதிகளில் தங்கி அத்தியாவசியமான பரீட்சைத் தேவைப்பாடுகளை நிறைவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக விடுதி அறை ஒன்றுக்கு ஒரு மாணவன் என்ற நடைமுறையும் பின்பற்றப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. –