திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்ட சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் 91 ஆயிரத்து 776 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான பாமகவின் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி 23 ஆயிரத்து 643 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உதயநிதி, வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 அன்றே தன் தந்தையும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில், தமிழகத்தின் முக்கியத் தலைவர்களையும், கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில், இன்று சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்துக்குச் சென்று அவருக்குப் பூங்கொத்து கொடுத்து உதயநிதி வாழ்த்துகளைப் பெற்றார். மேலும், விஜயகாந்தின் உடல்நலம் குறித்தும் உதயநிதி விசாரித்தார்.
அப்போது, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். உதயநிதிக்கு எல்.கே.சுதீஷ் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இன்றே உதயநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் மாநிலச் செயலாளர்கள் முறையே இரா.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரைச் சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.