சீனாவின் இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவது குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம், சினோவாக் கொரோனா தடுப்பு மருந்துகளை அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து இந்த வாரம் அறிவிக்கப்படும். சில நாடுகள் தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு எங்கள் முடிவுக்காகக் காத்திருக்கின்றன என்பதை நன்கு அறிவோம். விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் அமீரகம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பைஸர், மொடர்னா, ஸ்புட்னிக், கோவாக்சின், அஸ்ட்ராஜெனிகா ஆகிய தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கைக்கு சீனா அன்பளித்த சினோபார்ம் தடுப்பூசிகள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. அதை பயன்படுத்துவது பற்றி உலக சுகாதார அமைப்பிடம் இலங்கையும் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையிலுள்ள சீனர்களிற்கு செலுத்துவதற்காக அவை அன்பளிக்கப்பட்டதென கூறப்பட்டாலும், உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்ததும், அவற்றை இலங்கையர்களிற்கு செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்குமென தெரிவிக்கப்படுகிறது.