25.5 C
Jaffna
December 24, 2024
Pagetamil
கிழக்கு முக்கியச் செய்திகள்

முஸ்லிம் தரப்புக்களுடன் சுமந்திரன், சாணக்கியன் தனிப்பட்டரீதியில் பேசியிருக்கலாம்; கூட்டமைப்பு பேசவில்லை: தெளிவுபடுத்தினார் ஜனா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடனோ வேறு எந்த முஸ்லிம் கட்சியுடனோ எந்தவித பேச்சுவார்த்தைகளையும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கவில்லையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

ஒன்றிரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கருத்தாக அவர்களின் தீர்மானங்களைக் கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் நேற்று முன்தினம் ஊடகங்களிடம் பேசும்போது,  கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.

ஏற்கனவே கடந்தமுறை கிழக்கு மாகாணசபை தேர்தலில் மு.காவுடன் உள்ளக இணக்கப்பாடு ஏற்படுத்தி, முதலமைச்சர் பதவியை கூட்டமைப்பு விட்டுக் கொடுத்திருந்தது. எனினும், இந்த காலப்பகுதியில் தமிழ் பகுதிகள் பல அபகரிக்கப்பட்டதாக கிழக்கு தமிழ் மக்களிடம் பெரும் அதிருப்தியுள்ளது. இந்த நிலையில் சுமந்திரன், சாணக்கியனின் கருத்து கிழக்கில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து, தெளிவுபடுத்தும் விதமாக கோவிந்தன் கருணாகரம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் ஊடகங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றியும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலைப் பற்றியும் வந்த செய்திகள் மக்கள் மத்தியில் குழப்பமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாகக் கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே அந்த செய்திக்குப் பின்பு ஒரு அதிர்வலை ஏற்பட்டது. எனக்கும் பல தொலைபேசி அழைப்புக்கள் வந்திருந்தன.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்களாக அதாவது முஸ்லிம்களுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்காக நாங்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றோம் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பத்திரிகையாளர் மாநாட்டிலே குறிப்பிட்டிருந்தார்கள்.

அந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பர் கூட அப்படி நடந்ததாகக் கூறியிருந்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தமட்டில் மூன்று கட்சிகள் அதில் அங்கம் வகிக்கின்றன. அதன் ஒரு கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமாகக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நான் பதவி வகித்துக்கொண்டிருக்கின்றேன்.

இந்த வேளையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அலுவலக ரீதியாக எந்தவொரு கட்சிகளுடனோ குறிப்பாக முஸ்லிம் கட்சிகளுடனோ முஸ்லிம் காங்கிரஸுடனோ எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை.

சிலவேளைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் , சாணக்கியன் பேசியிருக்கலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட பேச்சுவார்த்தையோ விருப்பமோ தவிர தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோக பூர்வ பேச்சுவார்த்தையாகக் கருத முடியாது.

அதற்கும் மேலாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக நிசாம் காரியப்பர் இருந்து கொண்டு அந்தச் செய்தியை உறுதிப்படுத்துவதாகக் கூறியிருப்பது எந்தளவிற்கு அவர் அதனைப் புரிந்துகொண்டிருக்கின்றார் என்பது எனக்குத் தெரியவில்லை.

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக இருக்கின்ற நிசாம் காரியப்பர் முதலிலே அவருடைய கட்சியின் ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படுவதை நிறுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் இந்த நாட்டில் மாறிமாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்களினால் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டபோதும் அவர்களுக்கு எதிராக அநியாயங்கள் நடைபெற்றபோதும் அவர்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டபோதும் தமிழ் பிரதிநிதிகள் அனைவருமே அதற்கு எதிராகக் குரல்கொடுத்து வந்துள்ளனர்.

முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் முதலில் தங்கள் நல்லெண்ணங்களை வெளிப்படுத்துவதற்குத் தமிழ் பிரதிநிதிகள் செயற்படுவதைப்போன்று அவர்களது மனநிலையை மாற்றிக்கொண்டு செயற்பட வேண்டும்.

முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள்கூட கடந்த காலங்களிலே 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அவர்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்கக்கூடாது. கட்சியின் முடிவுகளுக்கு மாறாக அவர்களது உறுப்பினர்கள் செயற்பட்டால் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழ்வதற்குத்தான் விரும்புகின்றோம். அதற்கேற்றாற்போல் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள்கூட தமிழ் பேசும் சமூகத்தினரை பிரித்தாண்டு ஒரு பிரிவினையை ஏற்படுத்தி எங்களிடையே ஒரு முறுகல் நிலையை, மோதலை உருவாக்குவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் அதற்குள் அகப்படாமல் முஸ்லிம்களுடன் இணைந்து வாழ்வதற்குத்தான் விரும்புகின்றோம். மாகாணசபைத் தேர்தல் ஒன்று வந்தால் அதில் தமிழ் பேசும் மக்களாக இணைந்து ஆட்சியமைப்பதை நாங்கள் விரும்புகின்றோம்.

ஆனால், மாகாணசபைத் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலே தமிழ் பேசும் மக்கள் இணைந்து ஒரு அட்சியை ஏற்படுத்தக்கூடிய நிலை வருமானால் அதன் முதலமைச்சராகத் தமிழர் ஒருவர் வரவேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பமும் எண்ணமுமாகும்.

ஏனென்றால் 2015ல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸூம் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தியபோது ஒரு நல்லெண்ண அடிப்படையில் எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து செயற்படவேண்டும் என்ற தேவைப்பாட்டினை உணர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்திருந்தோம்.

அந்த நல்லெண்ண அடிப்படையில் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்க வேண்டும். அதுதான் எதிர்காலத்திலே எங்களது உறவைப் பலப்படுத்தும்.

குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்திலே நாங்கள் இணைந்து செயற்படவேண்டுமானால் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுவதனை நிறுத்துவதற்கு தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.

இன்று கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஒரு பேசுபொருளாக இருக்கின்றது. கல்முனை வடக்கில் வாழும் தமிழர்கள் மிகவேதனையுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஒன்று உருவாகும்போது அதனால் முஸ்லிம்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இன்னொரு இனத்திற்குக் கிடைக்கவேண்டிய உரிமையைத் தடுப்பதற்கு அல்லது அரசாங்கத்திடம் அவர்களுக்குரிய உரிமையைக் கொடுக்க வேண்டாமென்று சொல்வதற்கு எந்தவொரு இனத்தினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் உரிமை கிடையாது.

அதனை கல்முனை தொகுதி முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் செய்கின்றார். இந்த விடயங்களை அவர்கள் முதலில் நிறுத்த வேண்டும். தமிழர்களுடன் அன்னியோன்னியமாகப் பழகுவதற்கு அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

அந்தவேளையிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து மாகாணசபைத் தேர்தலிலே போட்டியிடும். முஸ்லிம்கள் அவர்களது சார்பிலே போட்டியிட்டு ஆட்சியமைக்கும்போது கூட்டமைப்பாக நாங்கள் பேசி ஒரு முடிவிற்கு வரலாமே தவிர ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவாக அவர்களது கருத்துக்களைக் கூறுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

அதிக ஞாபகத்திறன் கொண்ட 4 வயது சிறுவன்

east tamil

மியன்மார் அகதிகளை மிரிஹானவில் தடுத்து வைக்க தடை

east tamil

விருதுகள் வழங்கப்பட்டது ஏன்?

east tamil

மதுபானசாலையில் வாள்வெட்டு

east tamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

Leave a Comment