பங்களாதேஷில் பரவி வரும் இரண்டாவது கொரோனா அலையை எதிர்த்துப் போராடுவதற்கு கொரோனா தடுப்பூசிகளை எந்த விலை கொடுத்தேனும் தனது அரசாங்கம் வாங்கும் என்று பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள ஏழை மக்களின் துன்பங்களைத் தணிக்க இந்திய மதிப்பில் சுமார் 1,300 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தை பிரதமர் ஹசீனா தனது உத்தியோகபூர்வ இல்லமான கானா பபனில் இருந்து நேற்று தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி எடுத்திருந்தாலும் இல்லாவிட்டாலும், சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.
36.5 லட்சம் குறைந்த வருமானம் கொண்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் சுமார் 2,200 ரூபாய் நிதி உதவியையும் அவர் வழங்கியுள்ளார். இதனால் அவர்கள் தொற்றுநோய்களுக்கு மத்தியில் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
வைரஸின் இரண்டாவது அலை தோன்றிய உடனேயே, மனிதாபிமான உதவிகளின் நடவடிக்கைகளைத் தொடங்க பிரதமர் உத்தரவிட்டார்.
கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாக்க எந்தவொரு விலையிலும் தனது அரசாங்கம் தடுப்பூசிகளை வாங்குவதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். “நாங்கள் அதிக தடுப்பூசிகளைக் கொண்டு வருகிறோம். எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல், அதிகமான தடுப்பூசிகளைக் கொண்டு வருவோம்” என்று கூறினார்.
பின்னர், போலா, ஜாய்பூர்ஹாட் மற்றும் சட்டோகிராம் மாவட்டங்களில் பண உதவித் திட்டத்தின் பயனாளிகள் உட்பட பல்வேறு நபர்களிடமும் பிரதமர் பேசினார்.