தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் 7 ஆம் திகதி தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.
சட்டமன்ற பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக மட்டுமே 125 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.
இந்தநிலையில் தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு அறிக்கை சமர்பிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அனைத்து தொகுதிகளுக்குமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.
இதில் திமுக கூட்டணி 159 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 75 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
குறிப்பாக திமுக 133 தொகுதிகளிலும், அதன் கூட்டணிகளான காங்கிரஸ் 19, விடுதலை சிறுத்தைகள் கட்சி 4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளன.
இதேபோன்று அதிமுக 66 தொகுதிகளிலும், பாஜக 4, பாமக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் ஆணைய தகவல்களின்படி திமுக 37.70% வாக்குகளையும், அதிமுக 33.29% வாக்குகளையும் பெற்றுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட பிற கட்சிகளின் வாக்கு விழுக்காடு விபரம்: காங்கிரஸ் 4.27%, பாமக 3.80%, பாஜக 2.62%, தேமுதிக 0.43%, சிபிஐ 1.09%, சிபிஎம் 0.85%, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 0.48%. வாக்குகளையும் பெற்றுள்ளன.