சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி அமோக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.
ஆத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் கூட்டணியான பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிட்டார். நேற்று திண்டுக்கல்லில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அனைத்து சுற்றுகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஐ.பெரியசாமி முன்னிலை பெற்று வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் ஐ.பெரியசாமி 1,63,689 வாக்குகளும், பாமக வேட்பாளர் திலகபாமா 29,607 வாக்குகளும் பெற்றனர்.
இறுதியில் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் அமோக வெற்றிபெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் கட்டுப்பணம் இழக்கச் செய்தார்.
இவர் ஆத்தூர் தொகுதியில் 1989, 1996, 2006, 2011, 2016 என 5 முறை வென்றவர், தற்போது 6வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தென்மாவட்ட திமுகவில் ஸ்டாலினுக்கு செல்வாக்கை ஏற்படுத்தி தந்தவர்களில் ஐ.பெரியசாமிக்கும் பங்குண்டு. இதன்மூலம் ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார். கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், அவர்களது வாரிசுகளுக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கிடையாது என்று அறிவிக்கப்பட்ட போதுகூட, ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகனுக்கும் ஸ்டாலின் சீட் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அவரது மகனும் வெற்றி பெற்று உள்ளார்.