அண்ணாத்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியப் போகிறது. இந்நிலையில் தன் அடுத்த படத்தை இயக்குபவருக்கு போன் செய்து முழுக் கதையுடன் தயாராக இருக்கிறீர்களா என்று ரஜினி கேட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அந்த படத்தை தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு இடையேயும் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வரும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் பிபிஇ சூட் தான் அணிந்திருக்கிறார்களாம். யாரும் ரஜினிக்கு அருகே செல்லக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்களாம். சிவாவும், தயாரிப்பு தரப்பும் ரஜினியை ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போன்று பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்களாம்.
ரஜினியின் உதவியாளரை தவிர வேறு யாரும் அவர் அருகே செல்ல அனுமதி இல்லையாம். சிவா கூட ரஜினியுடன் பேசும்போது 3-4 அடி தள்ளி நின்று தான் பேசுகிறாராம். முன்னதாக உடல்நலம் பாதிக்கப்பட்டபோது அண்ணாத்த படமே தன் கடைசி படமாகிவிடக் கூடாது என்று ரஜினி கவலைப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து தொடர்ந்து புதுப்படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.
துல்கர் சல்மானை வைத்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி தான் அடுத்தாக ரஜினியை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியப் போகிறது, நீங்கள் கதையுடன் தயாராக இருக்கிறீர்களா என ரஜினி, தேசிங்கு பெரியசாமிக்கு போன் போட்டு பேசியதாக கூறப்படுகிறது.
ரஜினியை இயக்க எத்தனையோ பேர் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த அரிய வாய்ப்பு தேசிங்கு பெரியசாமிக்கு கிடைத்திருக்கிறது. இருப்பினும் இந்த கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
கொரோனா பயத்தால் இளம் நடிகர்கள் சிலரே படப்பிடிப்புக்கு செல்ல பயந்து வீட்டில் இருக்கும் நேரத்தில் ரஜினி அண்ணாத்த படப்பிடிப்பில் அதுவும் உற்சாகமாக கலந்து கொண்டிருப்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அவருடன் சேர்ந்து நடிப்பவர்கள் ரஜினியின் எனர்ஜி லெவலை பார்த்து இந்த மனுஷனுக்கு வயதாகிவிட்டதா, சான்சே இல்லை என்று ஆச்சரியப்படுகிறார்கள்