22 வயதான பிரவீன் ஜெயவிக்ரம அறிமுக ஆட்டத்திலேயே 11 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைக்க, பங்களாதேஷ் அணியை 209 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியது.
வெற்றி… ஒரேயொரு வெற்றி… அது சிம்பாவே என்றால் கூட பரவாயில்லை என இலங்கை கிரிக்கெட் அங்கலாய்த்துக் கொண்டிருந்த தருணத்தில் ஒரு டெஸ்ட் வெற்றியை இலங்கை பதிவு செய்துள்ளது.
இன்று காலை பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட்டை வெற்றியீட்டி, தொடரை 1-0 என இலங்கை கைப்பற்றியது.
437 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய பங்களாதேஷ் 227 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது,
ஜெயவிக்ரம இரண்டாவது இன்னிங்ஸில் 5/86 என பந்து வீச்சில் கலக்கினார். முதல் இன்னிங்ஸிலும் அவர் 6 விக்கெட் வீழ்த்தினார். 11/178 என அறிமுக போட்டியொன்றில் இலங்கை வீரரின் சிறந்த பந்துவீச்சு சொதனையும் அவர் வசமானது.
மற்றொரு முனையில் நெருக்கடி கொடுத்த ரமேஷ் மெண்டிஸ் 103 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
பங்களாதேஷ் தரப்பில் முஷ்பிகுர் ரஹீம் அதிகபட்சமாக 40 ஓட்டங்கள் எடுத்தார்.
இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாடி 9 விக்கெட் இழப்பிற்கு 493 என ஆட்டத்தை இடைநிறுத்தியது. திமுத் கருணாரத்ன மற்றும் லஹிரு திரிமன்ன சதம் அடித்தனர்.
இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 194/9 என ஆட்டத்தை இடைநிறுத்தியது.
ஆட்டநாயகன் பிரவீன் ஜெயவிக்ரமக.
இந்த மாத இறுதியில் இலங்கை ஒரு நாள் சர்வதேச தொடருக்கு பங்களாதேஷுக்கு செல்லவுள்ளது.