தமிழகத்தில் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பதில் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகளிடையே போட்டி உள்ள நிலையில் 3ஆம் இடத்தைப் பிடிக்கப் போகும் கட்சி எது, வெற்றி – தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் கட்சி எது என்பது குறித்து மூன்று கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
சீமான், டிடிவி தினகரன், கமல்ஹாசன் மூவரும் ஏதோ ஒரு காரணத்துக்காகக் கட்சியைத் தொடங்கியவர்கள். முதலாமவர் பல ஆண்டுகள் பல தேர்தல்களைக் கண்ட சீமான். மற்றொருவர் உச்சபட்ச அதிகாரத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இழந்த மரியாதையை மீட்கவும், அதிமுகவை மீட்க கட்சியை நடத்தும் டிடிவி தினகரன், மூன்றாமவர் இரண்டு ஆளுமைகள் இல்லா நேரம் தமிழகத்தில் இருட்டைப் போக்கப் போகிறேன் என டார்ச்சுடன் வந்துள்ள கமல்ஹாசன்.
மூவருமே முதலிடம் எங்களுக்குத்தான் எனப் பிரச்சாரத்தில் பேசித் தேர்தலைச் சந்தித்தனர். முதலிரண்டு இடங்களுக்கான போட்டியில் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகள் இருக்க, மூன்றாம் இடம் யாருக்கு என்பதில்தான் இவர்கள் மூவருக்கும் போட்டி என்பதும் அரசியல் அறிந்த அனைவருக்கும் தெரியும். மூன்றாமிடத்தில் வரும் கட்சி மட்டுமல்ல இந்த மூன்று கட்சிகளும் திமுக, அதிமுக வெற்றி வாய்ப்புகளைத் தீர்மானிப்பவர்களாக இருக்கக்கூடும் என்கிற கருத்தும் வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் மூன்றாவது அணி எப்போதும் வென்றதில்லை. ஆனால், வெற்றி- தோல்வியைத் தீர்மானித்துள்ளது. அதிலும் 2006ஆம் ஆண்டு தேமுதிக வரவால் தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் நிலை ஏற்பட்டது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேர்தல் அரசியல் வரலாற்றில் அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் ஒரு கட்சி கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சி அமைத்ததும் அந்தத் தேர்தலில்தான்.
ஆகவே மூன்றாவது அணியைச் சாதாரணமாக எடை போட முடியாது. ஆனால், இந்தத் தேர்தலில் மூன்றாவது அணியாக 2 அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சியும், மக்கள் நீதி மய்யமும் இளைஞர்கள் வாக்குகளைப் பெற வாய்ப்புண்டு என்று கூறப்படுகிறது. அதிமுகவின் வாக்குகளைக் குறிப்பிட்ட சதவீதம் அமமுக பெறலாம் என்ற கருத்தும் வைக்கப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் மிகச்சிறந்த முறையில் டிஜிட்டல் பிரச்சாரத்தைக் கொண்டு சென்றது. அதன் தலைவர் கமல்ஹாசனும், படித்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும் இணைந்த கட்சியாக, சரத்குமாரின் சமகவுடன் இணைந்து களம் கண்டது மநீம. நகர்ப்புற இளம் தலைமுறையினர் வாக்குகளை அதிகம் நாங்கள் பெறுவோம் என்று அடித்துச் சொல்கின்றனர் இவர்கள்.
புதுமையான பிரச்சாரம், யாருடனும் கூட்டணி இல்லை, அனைவரையும் விமர்சிப்பேன், போட்டியிடுபவர்களில் பாதிப் பேர் பெண் வேட்பாளர்கள் என தனித்துவமாகக் களம் கண்டார் சீமான். இவருக்கும் இளைஞர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
நாங்கள்தான் அதிமுக, அதிமுகவை மீட்டெடுப்போம் என முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் என அதிமுகவின் வேறொரு வடிவமாகக் களம் காண்கிறார் டிடிவி தினகரன். இவரது கட்சியுடன் தேமுதிகவும், ஒவைசியின் கட்சியும் இணைந்துள்ளது பலம். இவர்கள் எந்த அளவுக்கு வாக்குகளைப் பிரிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பும் எல்லோரிடமும் உண்டு.
இந்த மூன்று அணிகளில் யார் முதல் அணி, யார் அதிக வாக்குகளைப் பெறப்போகிறார்கள் என்பதை வைத்து அவர்களது அடுத்த அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். மூன்று கட்சிகளுக்குமே இந்தத் தேர்தலில் பலத்த எதிர்பார்ப்பு இருப்பதுபோல் மக்களுக்கும் இவர்கள் மீதான் எதிர்பார்ப்பு உள்ளதால் தேர்தல் முடிவுகளைத் தாண்டி மூன்றாம் இடத்தில் எது முதல் அணி என்கிற எதிர்பார்ப்பும் இந்தத் தேர்தலில் உள்ளது.