அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கினால் இதுதான் நடக்கும். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை அரசு தடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று காலை கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
அமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எதிர்வரும் 18 ம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செய்வதற்கு அரசாங்கத்தினால் தடை விதிக்கப்படலாம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது இதுதொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர் என்ற நிலையில் உங்களுடைய நிலைப்பாடு என்ன என வினவினார்.
இதற்க்கு பதிலளித்த அமைச்சர், இதை நாங்கள் பொறுத்திருந்துதான் பாக்கவேண்டியுள்ளது. இறந்த உறவுகளுகளை நினைவுகூருவதற்கு அல்லது அவர்களுக்கான மதக் கடமைகளை நிறைவேற்றுவதனை யாரும் தடுக்கப்போவதில்லை. ஆனால் திட்டமிட்ட உள்நோக்கத்தோடு செயற்படும் போது தான் அந்த பிரச்சனைகள் வரும்.
1971ம் ஆண்டும் 1987ம் ஆண்டும் தென்னிலங்கையில் சிங்கள இளைஞர் யுவதிகள் அரசுக்கெதிராக ஆயுதம் தூக்கியவர்களுக்கும் இதுதான் நடந்தது. அது பொதுவா எங்கயும் நடக்கக் கூடியது. இதை நாங்கள் ஒரு புதிதான விடயமாக பார்க்கக்கூடாது என்றார்.