தேர்தல் முடிவுகளில் தமிழகத்தில் சிறிய கட்சிகள் அதிக இடங்களைப் பெறுகின்றன. அதிலும் முதல் முறையாக அதிக இடங்களைப் பெற்று தமிழகத்தில் பாஜக கால் பதிக்கிறது. பாமக மீண்டு எழுந்து அதிக இடங்களைப் பிடிக்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பாமக 23 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும் போட்டியிட்டது. இதில் பாஜக போட்டியிட்ட இடங்கள் பெரும்பாலும் அதிமுக வெல்லும் வாய்ப்புள்ள இடங்களே. இடம், எண்ணிக்கையைத் தாண்டி வெல்லும் தொகுதிகளைப் பெற ஆரம்பத்திலிருந்தே பாஜக முனைப்பு காட்டியது.
பாமக எப்போதும் வடக்கு மாவட்டங்களில் வலுவான இருப்புள்ள கட்சி என்பதை நிரூபிக்கும் விதமாகத் தனது இடங்களை அதிகரித்து வருகிறது. பாஜக தமிழகத்தில் முதன் முறையாக அதிக இடங்களைப் பெற்று காலூன்றப் போகிறது. தமிழக பாஜக தலைவர் முருகன், நயினார் நாகேந்திரன், துறைமுகத்தில் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் முன்னணியில் உள்ளனர். பாஜக 5 இடங்களிலும், பாமக 10 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. இதன் மூலம் பாஜக வலுவான கணக்கைத் தமிழகத்தில் தொடங்கி, கால் பதிக்கிறது எனலாம்.