மே 4ம் தேதி முதல் அமெரிக்கா வர இந்தியர்களுக்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.
கொரோனா தொற்றின் முதல் அலை ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்திய நிலையில், கொரோனாவின் 2வது அலை இந்தியாவை திணற வைத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழப்பும் 3,500ஐ கடந்து சென்று விட்டது. கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகள், இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என தங்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளது. மேலும் பல நாடுகள் இந்தியாவுக்கு விமான சேவையையும் ரத்து செய்து விட்டன. ஆஸ்திரேலியா ஒருபடி மேலே போய் இந்தியாவில் இருந்து வரும் தங்கள் நாட்டினருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து விட்டது.
இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் நாடு திரும்ப வேண்டும் எனவும் இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்கா ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் இந்தியர்கள் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்து அந்த நாடு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மே 4-ம் தேதி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வரும் என்றும் அமெரிக்கர்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.