தெலுங்கில் வெற்றி பெற்ற படங்கள் தமிழிலும், தமிழில் வெற்றி பெற்ற படங்கள் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுவது சகஜம். ஒரு மொழியில் ஒரு படம் வெற்றி பெறும்போது, அதன் வெற்றி சதவீதத்தை எளிதாக கணிக்க முடிகிறது. தைரியமாக ரீமேக் செய்கிறார்கள்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த மாதம் வெளியான திரைப்படம் கர்ணன். தனுஷ் நடித்திருந்த இந்தப் படத்தை தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரித்திருந்தது. ஏப்ரல் 9 வெளியான கர்ணன் அனைத்து சென்டர்களிலும் வெற்றி பெற்றது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்படாமல் இருந்திருந்தால் இன்றும் கர்ணன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்திருக்கும்.
சமூக அரசியலை பேசிய கர்ணனில் தனுஷின் கதாபாத்திரம் மக்களில் ஒருவராக இல்லாமல், மக்களை காப்பாற்றும் ஒருவராக, ஹீரோயிசத்துடன் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த அம்சம் பிடித்துப் போய், தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் பெல்லம்கொண்ட சுரேஷ், கர்ணனின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். அவரது மகனும் நடிகருமான பெல்லாம்கொண்ட சாய் ஸ்ரீனிவாஸ் தனுஷ் நடித்த கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
ஓடிடி தளங்களின் வருகைக்குப் பிறகு க்ரைம், த்ரில்லர் படங்களுக்கு பார்வையாளர்கள் மத்தியில் சிறப்பு கவனம் கிடைத்துள்ளது. இந்தவகை படங்கள் பரவலாக ஓடி லாபமும் சம்பாதிக்கின்றன. இதன் காரணமாக நான்கு வருடங்களுக்கு முன் தமிழில் வெளியான 8 தோட்டாக்கள் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். இந்தப்; படத்தை மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்த ஸ்ரீகணேஷ் இயக்கியிருந்தார். வெற்றி, அபர்ணா பாலமுரளி நாயகன், நாயகியாக நடித்திருந்தனர். எனினும், படத்தின் கதை முழுக்க எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரத்தை சுற்றி நடப்பதாக எழுதப்பட்டிருந்தது. ஓரளவு வரவேற்பை பெற்ற இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை சுஷ்மிதா கொனிடெலா வாங்கியுள்ளார். இவரது கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மெண்ட் 8 தோட்டாக்களின் ரீமேக்கை தயாரிக்கிறது. தற்போது நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.