நாட்டில் கொரோனா அபாய நிலைமை காணப்படுகின்ற நிலையில் யாழ்ப்பாணம் நயினாதீவில் தேசிய வெசாக் நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
இம்முறை தேசிய வெசாக் தினத்தை யாழ் நயினாதீவுவில் நடாத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட நிலையில் வீதிகளை செப்பனிடுவதற்காக கனரக வாகனங்கள் மூலம் மணல் கடல் வழியாக மிதக்கும் பாதையூடாக கொண்டுசெல்லப்படுவதாக அறியக் கிடைத்தது.
நயினாதீவில் இடம்பெறும் வெசா தின நிகழ்வுகளுக்கு தென் இலங்கையில் இருந்து அதிகப்படியானவர்கள் வருவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுவரும் நிலையில் குறித்த நிகழ்வுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் புதன்கிழமை வடமாகாண ஆளுநர் பங்குபற்றுதலுடன் நயினாதீவில் இடம்பெற்றது.
இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தெற்கில் இருந்து குறித்த நிகழ்வுக்கு வருவோரால் யாழில் தொற்றாளர்களை அதிகரிக்கச் செய்யும் என அச்சம் வெளியிடப்படுகிறது.
அண்மையில் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலில் இடம்பெற்ற தேர் உற்சவத்தில் அதிகளவிலான மக்கள் சுகாதார வழிகாட்டல்களைப் பேனவில்லை என பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது. சைவ ஆலயங்களிற்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது.