வவுனியா சோயா வீதிக்கு அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாண்டிக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர்நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சோயா வீதிக்கு அண்மையில் வழிமறித்த இருவர் அதன் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனை அவதானித்த அந்த பகுதியில் நின்றவர்கள், குரல் எழுப்பியபடி உதவிக்கு ஓடிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் தமது ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த சாரதி அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் திருநாவற்குளம் மைதானத்தில் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது. ஒருவர் மீது குழுவொன்று கொடூர தாக்குதல் நடத்தியது. அந்த வீடியோ வெளியாகியிருந்தது.
தாக்குதலாளிகள் கைது செய்யப்படவில்லையென மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்த நிலையில், வவுனியா எம்.பி திலீபன் தலையிட்டதையடுத்து, பொலிசார் சிலரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே, இன்றைய தாக்குதல் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.