கொரோனா தொற்றை குணப்படுத்தும் விதமாக, குஜராத் மாநிலம் மெஹ்சனா மாவட்டத்தின் உண்ட்வா கிராமத்தில் நீராவி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தினமும் 100 முதல் 200 பேர், இந்த சிகிச்சையை எடுத்து வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், போதிய ஆக்சிஜன் வசதி, படுக்கைகள், மருந்துகள் உள்ளிட்டவைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில்., குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம், ஆயுர்வேத சிகிச்சை அடிப்படையிலான நீராவி சிகிச்சையை அமல்படுத்தி புதுமை புகுத்தி வருகிறது.
மெஹ்சானா மாவட்டத்தின் கிராம நிர்வாக அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்த நிலையில், அவர் நீராவி சிகிச்சையை எடுத்துக்கொண்டு விரைவில் குணம் அடைந்தார். இதனையடுத்து பலரும் இந்த நீராவி சிகிச்சை முறையை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தனர். 3 ஆயிரம் மக்கள் உள்ள இந்த உண்டாவ் கிராமத்தில், தற்போது 10க்கும் குறைவாகவே, கொரோனா பாதிப்பு நபர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நீராவி சிகிச்சையின் பலன் தற்போது வெகுவேகமாக பிரபலம் அடைந்து வரும் நிலையில், தலைநகர் அகமதாபாத்தில் இருந்தும் மக்கள் நீராவி சிகிச்சை பெற உண்ட்வா கிராமத்தை நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளனர். இந்த நீராவி சிகிச்சை 6 மாதங்களுக்கு முன்பு, உண்ட்வா கிராமத் தலைவரான மகேந்திர படேல் என்பவரின் மனதில் உதித்த எண்ணத்தால் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.