நற்பெயருக்கும் கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்தியை வெளியிட்ட, அங்கஜன் இராமநாதனின் குடும்ப தொலைக்காட்சியான கப்பிட்டல் தொலைக்காட்சி நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் 500 மில்லியன் ரூபாய் நஸ்டஈடு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஈ.பி.டி.பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இதுதொடர்பான கடிதம் குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சட்டத்தரணியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொய்யாகப் புனையப்பட்ட செய்தி ஒன்று கடந்த 12.03.2021 அன்று கப்பிட்டல் தொலைக்காட்சியில் (Capital TV) ஒளிபரப்பப்பட்டது.
குறித்த செய்தியில், கிளிநொச்சி மாவட்டத்தில் வீட்டுத் திட்டப் பயனாளர் தெரிவில் முறைகேடு இடம்பெற்று இருப்பதாகவும், குறித்த முறைகேட்டில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்டிருப்பதாகவும் பொய்யாகப் புனையப்பட்ட செய்தியை வெளியிட்டிருந்தது.
இந்தச் செய்தி தீயநோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் தனக்கு அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்து தனது சட்டத்தரணி மூலம் கடற்றொழில் அமைச்சரினால் கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கோரிக்கைக் கடிதமானது கப்பிட்டல் தொலைக்காட்சியின் (Capital TV) உரிமையாளரான ரைமாஸ் பிறைவேற் லிமிட்டட் (Trymas Private Limited) எனும் நிறுவனத்திற்கும் அதன் பணிப்பாளர் விதுர்சன் வின்சேன்திர ராஜனுக்கும் அனுப்பப்பட்டுள்ளதுடன், கப்பிட்டல் தொலைக்காட்சி (Capital TV) ஒளிபரப்புச் செய்த செய்தியினால் ஏற்படுத்தப்பட்ட அவமானத்திற்கான நஸ்டஈடாக ரூபாய் 500 மில்லியன் பணத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அடுத்த இரு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டள்ளது.
அத்துடன் அவ்வாறு நஸ்டஈட்டை செலுத்தத் தவறும் பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கை ஊடாக குறித்த நஸ்ட ஈட்டைப் பெற்றுக் கொள்வதற்காக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.