காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை ஏவி கொடூரமாக கொன்ற வழக்கில் நடிகையும், ‘மிஸ்’ கர்நாடக அழகியுமான ஷான்யா, தனது காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்வாப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில்லாமல் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி கேஷ்வாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபரை யாரோ மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி காரில் கொண்டு வந்து சாலையோரம் வீசிவிட்டு சென்றிப்பதுது தெரியவந்தது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இந்த படுகொலை தொடர்பாக விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணகாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது படுகொலை செய்யப்பட்டது ‘மிஸ் கர்நாடகா’ அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், நடிகையுமான ஷான்யா காடவேயின் அண்ணன் ராகேஷ் என்பது தெரியவந்தது. அதாவது மும்பையில் வசித்து வரும் நடிகை ஷான்யா தனது மேலாளர் நியாஜ் அகமது என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இது ஷான்யாவின் அண்ணன் ராகேசுக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து அவர் ஷான்யாவிடம் கேட்டு கண்டித்துள்ளார். மேலும் நியாஜ் அகமதுடனான காதலை கைவிட்டு விடும்படி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் ஷான்யா, நியாஜ் அகமதுடனான தனது காதலை தொடர்ந்து வளர்த்து வந்தார். மேலும் அவரையே திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்தார். இதற்கு ராகேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ராகேசை கொலை செய்ய ஷான்யா முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தனது காதலன் நியாஜ் அகமதுவிடம் தெரிவித்தார். அவரும், இந்த கொலை திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார். அதையடுத்து அவர்கள் கூலிப்படையை ஏவி ராகேசை கொலை செய்ய முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் கூலிப்படையை சேர்ந்த தவுசிப் அகமது, அல்தாப் தாஜுத்தின் முல்லா, முகமது உருவா கிரினிவாலே, மாலிக், சைதிப்புத்தீன், பீரோஜ் ஆகியோரை அணுகி ராகேசை கொலை செய்ய பணம் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் கடந்த 9-ந் தேதி ராகேசை கூலிப்படையைச் சேர்ந்த தவுசிப் அகமது உள்ளிட்டோர் காரில் கடத்தில் படுகொலை செய்தனர். பின்னர் அவரது உடலை காரில் வைத்துக்கொண்டு 3 நாட்களாக பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர். பின்னர் கர்நாடகத்தில் தார்வார் மவட்டத்திற்குள் நுழைந்த அவர்கள், உப்பள்ளி அருகே சக்லேஷ்புரா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது ராகேசின் உடலில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இதனால் அவர்கள் அரிவாளால் ராகேசின் உடலில் இருந்து கை, கால்களையும், தலையையும் துண்டு, துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிவிட்டு காரிலேயே தப்பிச் சென்றுவிட்டது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் காரின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரை பிடித்தனர். அவர் மூலம் கூலிப்படையைச் சேர்ந்த தவுசிப் அகமது, அல்தாப் தாஜுத்தின் முல்லா, முகமது உருவா கிரினிவாலே, மாலிக், சைதிப்புத்தீன், பீரோஜ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்தி நடிகை ஷான்யாவையும், அவரது காதலன் நியாஜ் அகமதுவையும் போலீசார் கைது செய்தனர். கைதான 8 பேரையும் போலீசார் தார்வார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.