26.7 C
Jaffna
December 15, 2024
Pagetamil
விளையாட்டு

கோலி புதிய சாதனை: ஆர்பிசி அணி பிரமாண்ட வெற்றி: கடைசி இடத்தில் ராஜஸ்தான்!!

தேவ்தத் படிக்கலின் அபாரமான சதம், கேப்டன் கோலியின் அரைசதம் ஆகியவற்றால் மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 21 பந்துகள் மீதமிருக்கையில் 181 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆர்சிபி அணி தொடர்ந்து பெறும் 4-வது வெற்றியாகும். இதன் மூலம் 8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 தோல்வி, ஒரு வெற்றி என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

ஆட்டநாயகன் படிக்கல்

இந்த போட்டியி்ல் அபாரமாக பேட் செய்து சதம் அடித்து 52 பந்துகளில் 101(11பவுண்டரி,6சி்க்ஸர்) ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்த தேவ்தத் படிக்கல் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். விராட் கோலி 47 பந்துகளில் 72(6பவுண்டரி,3 சிக்ஸர்) ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

சாதனை நாயகன் கிங் கோலி

தேவ்தத் படிக்கல், விராட் கோலி கூட்டணி 178 ரன்களை அபாரமாக சேஸிங் செய்தது மட்டுமல்லாமல் பல சாதனைகளையும் படைத்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் தொடரில் முதல் முறையாக 6ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்றும் 40-வது அரைசததத்தை எட்டிய வீரர் எனும் பெருமையையும் கோலி பெற்றார். இதுவரை 196 போட்டிகளில் விளையாடிய கோலி, 6,021 ரன்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

இதில் 5 சதங்கள், 40 அரைசதங்கள், 204 சிக்ஸர்கள், 518 பவுண்டரிகள் அடங்கும். இதுவரை ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் இந்த சாதனையை எட்டியதில்லை, முதல்முறையாக 4ஆயிரம், 5 ஆயிரம் ரன்களை எட்டியவரும் கோலிதான், தற்போது 6ஆயிரத்தை தொட்டவரும் கிங் கோலிதான்.

ஆர்சிபி அணிக்காக சர்வதேச அறிமுகம் இல்லாத 3 வீரர்கள் இதற்கு முன் சதம் அடித்துள்ளனர். ஷான் மார்ஷ்(2008,ராஜஸ்தான் எதிராக) மணிஷ் பாண்டே(2009, டெக்கான் சார்ஜர்ஸ்) பால் வால்தாட்டி(2011, சிஎஸ்கே) ஆகியோர் சதம் அடித்தனர். தற்போது ேதவ்தத் படிக்கல் சதம்அடித்துள்ளார்.

3-வது வீரர் படிக்கல்

மிக இளம் வயதில் சதம் அடித்த 3-வது வீரர் எனும் பெருமையை படிக்கல் பெற்றுள்ளார். இதற்கு முன் மணிஷ் பாண்டே 2009ம்ஆண்டு சதம் அடித்தபோது அவருக்கு வயது19, 253 நாட்களாகி இருந்தது. ரிஷப்பந்த் 2018-ல் சதம் அடித்தபோது அவருக்கு வயது 20,218 நாட்களாக இருந்தது. தற்போது படிக்கல்லுக்கு வயது 20, 289வயதாகிறது

178 ரன்களை 10 விக்கெட் வித்தியாசத்தில்ல ஆர்சிபி அணி சேஸிங் செய்தது ஐபிஎல் வரலாற்றிலேயே விக்கெட் இழப்பின்றி சேஸ் 3-வது மிகப்பெரிய இலக்காகும். இதற்கு முன், 2017ல் கொல்கத்தா அணி(184,குஜராத்லயன்ஸ்) 2020ல் சிஎஸ்கே(179,கிங்ஸ்பஞ்சாப்) ஆகியவை விக்கெட் இழப்பின்றி சேஸிங் செய்திருந்தன.

ஆர்சிபி அணி 4-வது முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதற்குமுன் ஐபிஎல் வரலாற்றில் 2 முறைக்கு மேல் எந்த அணியும் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதில்லை. கடந்த 2010ல் ராஜஸ்தான், 2015ல் டெல்லி டேர்டெவில்ஸ், 2018ல் பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 10 விக்கெட்டில் ஆர்சிபி வென்றுள்ளது

கிளாசிக்கான ஆட்டம்

ஆர்சிபி அணியைப் பொருத்தவரை பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என 3 பிரிவுகளிலும் மிக அற்புதமாகச் செயல்பட்டனர். ஆடுகளத்தையும், புதிய பந்தையும் ப யன்படுத்திக் கொண்ட முகமது சிராஜ் இரு முக்கிய விக்கெட்டுகளை கழற்றினார். ஜோஸ் பட்லரை ஸ்டெம்பை தெறி்க்கவிட்டும், டேவிட் மில்லரை கீழே விழவைக்கும் யார்கரையும் வீசி திக்குமுக்காடவைத்தார்.

துணையாக பந்துவீசிய ஜேமிஸனும், வோரா விக்கெட்டையும், சாம்ஸன் விக்கெட்டை சுந்தரும் எடுத்து ராஜஸ்தான் அணியைத் திணறவைத்தனர். இது தவிரகடைசி நேரத்தில் ஹர்ஸல் படேல் தனது பங்கிற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சு பலத்தை வெளிப்படுத்தினர்.

பேட்டிங்கைப் பற்றி கூறத் தேவையில்லை. கோலி களமிறங்கியுடவுன் அவரை வீழ்த்த லெக் ஸ்பின்னர் ஸ்ரேயாஸ் கோபால் வரவழைக்கப்பட்டார். ஆனால், எதற்கும் அஞ்சாதவன் என்ற பாணியில் கோலி முதல் ஓவரிலே சிக்ஸர் அடித்து மிரட்டல் விடுத்தார். அதன்பின் இருவரும் சேர்ந்து ரன்வேட்டையாடினர். 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கொடுத்துள்ளனர்.

பாவம் ராஜஸ்தான்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொருத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் படுமோசமாக இருக்கிறது. தொடக்கத்தில் 5 ஓவர்களில் விக்கெட் விழாமல் தடுத்துவிட்டாலே ஓரளவுக்கு தாக்குப்பிடிக்க முடியும். ஆனால், இதுவரை நடந்த 4 போட்டிகளில் 3 போட்டிகளில் பவர்ப்ளே ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை ராஜஸ்தான் இழந்து தடுமாறியுள்ளது. அதிலும் மனன் வோரா தொடர்ந்து சொதப்பும் போது வேறு யாரையும் மாற்ற கேப்டன் சாம்ஸன் முன்வரவில்லை.

சாம்ஸன் சொதப்பல்

சாம்ஸன் முதல்போட்டியில் சதம்அடித்தார். அதோடு சரி, அதன்பின் எந்த ஆட்டத்திலும் உருப்படியாக விளையாடவில்லை. கேப்டன்ஷிப் தவறாக வழங்கப்பட்டதோ என்று நிர்வாகத்தை யோசிக்க வைத்துள்ளார் சாம்ஸன். ஐபிஎல் தொடரிலேயே அதிகமான விலைக்கு வாங்கப்பட்ட மோரிஸ் ஒரு போட்டியில் மட்டும் மேட்ச் வின்னராக இருந்தார், மற்ற ஆட்டங்களில் அவரின் பேட்டிங், பந்துவீச்சு எடுபடவில்லை.

பல் இல்லாத பந்துவீச்சு

பந்துவீச்சிலும், எதிரணிக்கு மிரட்டல் விடுக்கும் அளவுக்கு எந்த பந்துவீச்சாளரும் இல்லை. சர்வதேச அனுபவம் கொண்டவர் எனப் பார்த்தால் கிறிஸ் மோரிஸ்,ரஹ்மான் மட்டுமே உள்ளனர். மற்றவகையில் ரியானபராக், கோபால், திவேட்டியா, சக்காரியா என ஒருவருக்கும் சர்வதேச அனுபவம் என்பதே கிடையாது.

ஒட்டுமொத்தத்தில் பந்துவீீச்சில் மிகவும் பலவீனமாக ராஜஸ்தான் அணி இருக்கிறது. இதுபோன்ற பந்துவீச்சை வைத்துக்கொண்டு வெல்வது என்பது கடினம்தான். இந்தப் போட்டியில்ஆறுதலாக விஷயம் என்பது நடுவரிசையில் ரியான்பராக், ஷிவம் துபே, திவேட்டிய ஆகியோர் ஓரளவுக்கு நின்று பேட் செய்தது மட்டும்தான்.

மற்றவகையில் ஆர்சிபி அணியின் வலிமையான தொடக்க வரிசையை அசைத்துப் பார்க்கும் அளவுக்கு பந்துவீச்சு அமையவில்லை. அதிலும் தற்போது வலுவாக இருக்கும் ஆர்சிபி அணிக்கு எதிராவும், பேட்டிங்கிற்கு சாதகமான இதுபோன்ற ஆடுகளத்திலும் 178 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் அல்ல. இன்னும் 20 ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும்.

மிரட்டல் கூட்டணி

178 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் கோலி, தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்திலிருந்தே ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை அடித்து துவம்சம் செய்தனர். பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்ளைச் சேர்த்து அணியை 10 ரன்ரேட்டில் கொண்டு சென்றனர். படிக்கல் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். 9.4 ஓவர்களில் ஆர்சிபி அணி 100 ரன்களை எட்டியது. விராட் கோலி 34 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

இருவரையும் பிரிக்க ராஜஸ்தான் கேப்டன் சாம்ஸன் பலபந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் முடியவில்லை. அதிலும் தேவ்தத் நேரம் செல்லச் செல்ல ராஜஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். 51 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இருவரின் அபாரமான ஆட்டத்தால் 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் சேர்த்து ஆர்சிபி அணி வென்றது. கோலி 72 ரன்களுடனும், படிக்கல் 101 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டாப்ஆர்டர் காலி

முன்னதாக ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. பவர்ப்ளே ஓவருக்குள் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்தது. சிராஜின் வேகத்தில் பட்லர்(8) ரன்னில் கிளீன் போல்டாகினார், ஜேமிஸன் ஓவரில் வோரா(7) ரன்னில் விக்கெட்டை இழந்தார். டேவிட் மில்லருக்கு அருமையான யார்கரை வீசி அவரை பெவிலியன் அனுப்பினார் சிராஜ். கேப்டன் சாம்ஸன் அதிரடியாக தொடங்கியபோதும், 21 ரன்னில் சுந்தர்பந்துவீச்சில் வி்க்கெட்டை பறிகொடுத்தார்.

ஆறுதல்

5வது விக்கெட்டுக்கு பராக், துபே கூட்டணி சேர்ந்து அணியை ஓரளவுக்கு தூக்கி நிறுத்தினர். பராக் 25 ரன்னில் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். துபே 46 ரன்னில் ரிச்சார்டஸன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். திவேட்டியா அதிரடியாக ஆடி 40 ரன்னில், சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மோரிஸ் (10), சக்காரியா(0) ஆட்டமிழந்தனர். 170 ரன்களில் மட்டுமே ராஜஸ்தான் அணி திவேட்டியா, மோரிஸ், சக்காரியா ஆகிய 3 விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

ஐபிஎல் 2025: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

Pagetamil

Leave a Comment