ஏர்பாட்ஸ்களை தனக்கு கிடைத்த விருந்தாக நினைத்த கோல்டன் ரெட்ரீவர் இன நாய் ஒன்று, அதனை தவறுதலாக விழுங்கி விட்டது. அறுவை சிகிச்சை செய்து அந்த ஏர்பட்ஸ்களை பார்த்தால், அதில் ஒரு சிறு கீறல் கூட இல்லாமல் இருந்ததை பார்த்த டாக்டர்களும், நாயின் உரிமையாளர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.
யார்க்ஷயரை சேர்ந்த ரேச்சல் ஹிக்ஸ் என்பவர், ஜிம்மி என்ற கோல்டன் ரெட்ரீவர் நாயை வளர்ந்து வந்தார். மிகவும் துறுதுறுவென இருக்கும் ஜிம்மிக்கு, கடந்த ஈஸ்டர் தினத்தில், ஈஸ்டர் முட்டைகளை உண்பதற்கு வழங்கினார் ரேச்சல். அப்போது தனது பாக்கெட்டிலிருந்த ஏர்பாட்ஸ் தவறி கீழே விழ, ஈஸ்டர் முட்டை என தவறுதலாக நினைத்த ஜிம்மி, அதனை அப்படியே விழுங்கி விட்டது.
ரேச்சல் சுதாரிக்கும் முன் இந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது. இதனையடுத்து உள்ளூரில் உள்ள கால்நடைகள் மருத்துவமனைக்கு ஜிம்மியுடன் விரைந்திருக்கிறார் ரேச்சல். அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வெற்றிகரமாக ஏர்பாட்ஸ் அகற்றப்பட்டது. அது மட்டுமல்லாமல், ஏர்பாட்ஸ்கள் எந்தவிதமான கீறல்களும் இல்லாமல், அப்படியே வெளியே வந்திருக்கிறது. மேலும், சார்ஜிங் லைட்டும் எரிந்து கொண்டு இருக்கிறது. சில மணிநேரங்கள் ஒரு நாயின் வயிற்றுக்குள் இருந்தும் கூட அது வேலை செய்து கொண்டிருந்ததை கண்டு, ரேச்சலும், டாக்டர்களும் வியப்பு அடைந்தனர்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவனையில் ஒரு நாள் இரவு தங்க வைக்கப்பட்ட ஜிம்மி, பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. தற்போது அது நலமுடன் இருப்பதாகவும், பிரச்சனை எதுவும் இல்லை எனவும் ரேச்சல் தெரிவித்திருக்கிறார்.