முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து, பிரதமர் மோடிக்கு நேற்று அவர் கடிதம் எழுதினார். அதில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முக்கிய விசயம் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை குறைந்த அளவிலான மக்கள் தொகையினருக்கே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. சரியான கொள்கை வடிவம் இருப்பின், இன்னும் சிறப்புடனும், விரைவாகவும் செயல்பட முடியும் என்பது நிச்சயம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான உரிமம் பெற்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றும் அவர் மத்திய அரசிடம் கேட்டு கொண்டார். இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.