துபாயில் வசித்து வரும் ஆறு இந்தியர்கள் லாட்டரி பரிசு போட்டியில் வெற்றிபெற்று கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வென்றுள்ளனர்.
துபாய் லாட்டரியில் இந்தியர்கள் அடிக்கடி வெற்றிபெற்று கோடிக்கணக்கில் பரிசுத் தொகை வெல்வது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில், துபாய் மஹ்சூஸ் லாட்டரியில் 10 லட்சம் திர்ஹாம்ஸ் (இந்திய மதிப்பில் 20.29 கோடி ரூபாய்) பரிசுத் தொகையை ஆறு இந்தியர்கள் வென்றுள்ளனர்.
ஆறு பேருக்கும் 10 லட்சம் திர்ஹாம்ஸ் பரிசுத் தொகை தலா 166,667 திர்ஹாம்ஸ் என பிரித்தளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆறு பேரில் ஐந்து பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் வெற்றிபெற்ற கேரளாவை சேர்ந்த ராபர்ட், “முதல்முறையாக மஹ்சூஸ் லாட்டரியில் போட்டியிட்டேன். எனது நண்பர்கள் சிலரும் போட்டியிட்டதால் நான் முயற்சித்தேன். வெற்றிபெற்றது பெருமகிழ்ச்சியான தருணம்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல மற்றொரு வெற்றியாளரான முகமது, “மஹ்சூஸில் இருந்து எனக்கு இமெயில் வந்திருந்தது. நான் வெற்றிபெற்றதாக தெரிவித்தனர். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. எனது கடன்களை அடைக்கவும், குழந்தைகளின் எதிர்காலத்துக்கும் இந்த பணம் உதவும்” என்று தெரிவித்துள்ளார்.