1000 ரூபாவை பெற்றுக்கொடுத்து அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவை நிறைவேற்றியுள்ளதாக இ.தொ.கா பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஆறுமுகன் தொண்டமான் சமூக அபிவிருத்தி நிலையம் என்ற பெயரில் தொழில் அபிவிருத்தி பயிற்சி நிலையம் ஒன்று இன்று (18) கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
மலையக இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு கனவையும், மேலதிக படிப்பினையை தொடர்வதற்குமாக இந்த பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையத்தை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸ திறந்து வைத்தார்.
இந்நிகழ்வின் போது, இ.தொ.காவின் போசகர் முத்துசிவலிங்கம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஷ்வரன், பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், பிரதி தலைவர், கட்சி முக்கியஸ்தர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, கட்சியின் ஆரம்பகால தலைவிமார்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே இ.தொ.கா பொதுச் செயலாளர் மேற்கண்ட விடயத்தை கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ஜீவன் தொண்டமான்,
‘ஆறுமுகன் தொண்டமானின் கனவு சிறிது சிறிதாக நிறைவேறு வருகின்றது. இ.தொ.கா இன்று 1000 கூபாவை பெற்றுக்கொடுத்துள்ளது. இதனை யாரும் நிராகரிக்கவோ, மறுக்கவோ முடியாது. நுவரெலியா மாவட்டத்திற்கு உரித்தான வகையில் கொட்டகலையில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான பணிகள் ஒரிரு ஆண்டுகளில் நிறைவடையும். இ.தொ.கா இந்த நிலையத்தை வைத்து மற்றவர்களை போல் அரசியல் நடத்தாது. இந்த நிலையம் அமைய பெறுவதற்கு விஜயலக்ஷ்மி தொண்டமான் பெரும்பங்கு ஆற்றியுள்ளார்.
சிலர் இ.தொகாவை காட்டிக்கொடுத்தனர் சிலர் தலைவர் தொண்டமானை முதுகில் குத்தினர். பழையவைகளை மறக்க கூடாது. வரலாறும் முக்கியம் என்றார்.
–க.கிஷாந்தன்-