இந்தியாவில் வாழும் நூற்றுக்கு மேற்பட்ட ஈழ தமிழ் சிறார்களின் கல்விக்காக பெரும் தொகையான பணத்தை செலவிட்டவர் நடிகர் விவேக் என இரங்கல் தெரிவித்துள்ளார் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து, சின்னக் கலைவாணர் என்று எல்லோராலும் ஏற்றிப் போற்றப்பட்ட நடிகர் விவேக் அவர்கள், திடீர் மாரடைப்பால் இன்று காலையில் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி, மிகுந்த வேதனை அளிக்கின்றது.
தமிழ்த்திரை உலகில், நகைச்சுவைக் கருத்துகள் மூலம், மிகப்பெரும் சாதனைகளைப் படைத்த விவேக் தனது நகைச்சுவை மூலம் நல்ல கருத்துகளைக் கூறியதோடு, குணச்சித்திர நடிகர்கவும் திகழ்ந்து இருக்கின்றார்.
தான் ஈட்டிய பொருளிள் பெரும்பகுதியை, சமூகத் தொண்டு அறப்பணிகளுக்காகச் செலவிட்டார். அப்துல் கலாம் அவர்கள் மீது மிகுந்த மதிப்புக் கொண்டு, அவரது நினைவுப் பட்டறை அமைத்து, இளம்பிள்ளைகளுக்கு மனித நேயக் கருத்துகளை எடுத்து உரைத்தார். தமிழ்நாடு முழுமையும் இலட்சக்கணக்கான மரங்களை ஊன்றி வளர்த்தார்.
அது மாத்திரமல்ல இந்தியாவில் வாழும் நூற்றுக்கு மேற்பட்ட ஈழ தமிழ் சிறார்களின் கல்விக்காக பெரும் தொகையான பணத்தை செலவிட்டவர்
மட்டக்களப்பு மாவட்டத்திற்க்கு நேரடியாக வந்து தமிழ் மொழியின் சிறப்பையும், மாணவர்கள் பொது சிந்தனையுடன் செயற்பட வேண்டும் என்ற கருத்துக்கள் அடங்கிய சிறப்புரையை வழங்கியமையும் நாம் எண்ணிப் பார்க்கின்றோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், ஈழத் தமிழர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.