களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் பகுதியில் உள்ள தோட்ட காணியொன்றில் தென்னை மரத்திலிருந்து ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேவாலய வீதி, மகிளூரைச் சேர்ந்த 59 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது.
தென்னம் பதநீர் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறிய நபரை மிக நீண்ட நேரமாகியும் காணவில்லையென தேடியபோது, தென்னை மரத்தின் வட்டிற்குள் மூச்சுப் பேச்சு அற்ற நிலையில் இருந்ததைக் கண்டதனைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குறித்த நபர் இறந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக களுவாஞ்சிகுடி பொலிஸார் குறித்த சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன், களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்டதன் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.