ஒக்ரோபர் மாதத்தின் பின்னர் யாழ் மாவட்டத்தில் 1,116 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, மாவட்டத்தில் 1,784 குடும்பங்களை சேர்ந்த, 5,042 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.
இன்று (16) செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒக்டோபர் மாதத்தின் பின்னர் 1116 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் சுமார் 502 நபர்கள் சுகமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். 600 இற்கு உட்பட்டவர்கள்தான் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். யாழ்மாவட்டத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இந்த வாரம் அளவில் சற்று அதிகரித்திருக்கிறது. தற்போது மரண எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நான்கு நாட்களாக தினமும் தலா ஒவ்வொரு மரணத்தை எதிர்கொண்டு வருகிறோம்.
மேலும் 1,784 குடும்பங்கள் தற்போது சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 5042 நபர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக இலங்கையிலேயே அதிக தொற்றாளர்களை கொண்ட மாவட்டமாக யாழ் மாவட்டம் மாறி வருகிறது.
எனவே, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சுய தனிமைப்படுத்தப்பட்ட 1523 குடும்பங்களுக்காக சுமார் 15.23 மில்லியன் ரூபா பணத்தை பெற்று வழங்கியிருக்கிறோம். மேலும் 491 குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அனேகமாக அடுத்த வாரம் அது கிடைக்கும்.
அரசாங்கம் புத்தாண்டை முன்னிட்டு வறிய மக்களுக்கு கொடுத்த 5,000 ரூபா கொடுப்பனவுகளிற்காக எங்களது மாவட்டத்தில் 1,48,178 குடும்பங்கள் தகுதி பெற்றிருந்தன. அவற்றில் 1,11,855 குடும்பங்களுக்கு ஏற்கனவே இந்த கொடுப்பனவு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. மிகுதியானவர்களிற்கு வழங்குவதற்கான நிதி இன்று எங்களுக்கு கிடைத்திருக்கிறது. இன்றும், நாளையும் அவை வழங்கப்பட்டு முடிக்கப்படும் என்றார்.