கேரளாவில் போதுமான அளவுக்கு கொரோனா தடுப்பு மருந்து இல்லாத காரணத்தால் ஊரடங்கு தேவைப்படலாம் என அம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் போதுமான அளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி இல்லை என்பதாலும், தொற்று அதிகரித்து வரும் காரணத்தாலும் மாநில அளவில் ஊரடங்கு செயல்படுத்தப்படலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்தார். கடந்த சில நாள்களாக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக வெளியான தகவல்களுக்கு இடையில் கேரளாவில் அமைச்சரின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், ‘நாங்கள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரசாரத்தை மேற்கொண்டோம். எங்களிடம் தற்போது இருக்கும் தடுப்பூசிகள் இரண்டு நாள்களில் தீரும் நிலையில் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் இந்த வேளையில், தடுப்பூசி வரத்து குறைந்துள்ளதால், தொற்று அதிகரித்துள்ள மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு போடலாம் என ஆலோசித்து வருகிறோம்’ என்றார்.
பின்னர் வெளியிட்ட அறிக்கையில், ‘கேரள சுகாதாரத்துறை இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கியுள்ளது. திங்களன்று, 2.38 லட்சம் டோஸ் வழங்கப்பட்டது. இதுவரை வழங்கப்பட்ட 50,71,550 தடுப்பூசிகளில் 49,19,234 கோவிஷீல்டு மற்றும் 1,52,316 கோவாக்ஸின் வழங்கப்பட்டுள்ளன. இதில் 45,48,054 பேர் இரண்டு தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 16-ம் தேதி கேரளாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதுவரை, சுகாதார ஊழியர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திங்களன்று பரிசோதிக்கப்பட்ட 45,417 மாதிரிகளில் 5,692 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
கேரளாவிலும், இந்தியாவில் இன்னும் சில மாநிலங்களிலும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதை அடுத்து, தமிழகத்தின் நிலை என்னவென்று அறிவதற்காகத் தமிழக பொது சுகாதாரத் துறை தடுப்பூசித் திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி வினய்யிடம் பேசினோம்.
”தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையில் 9 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ஒரு நாளுக்கு 1.20 லட்சம் பேர் தடுப்பூசியைப் பயன்படுத்தினாலும் நம்மிடம் இருப்பதை கொண்டு 6 நாள்களுக்கு தடுப்பூசி வழங்க முடியும். மேலும், முன்பைவிட தற்போது மக்களிடம் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகமாகியிருப்பதை உணர முடிகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியின் அளவு போதுமானதாகவே உள்ளது” என்று தெரிவித்தார்.