சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில், துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், இந்திய அணியின் கப்டன் விராட் கோலியை முதலிடத்திலிருந்து கீழே இறக்கி, பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் போட்டித் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த 4வது துடுப்பாட்ட வீரர் பாபர் ஆஸம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் ஜாஹீர் அப்பாஸ் (1987-88), ஜாவித் மியான்டட் (1988-89), முகமது யூசுப் (2003) ஆகியோர் முதலிடத்தைப் பிடித்திருந்தனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் கடைசி ஆட்டத்தில் 82 பந்துகளில் 94 ரன்களை பாபர் ஆஸம் சேர்த்தார். இதன் மூலம் 13 புள்ளிகள் பெற்று 865 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
விராட் கோலியை விட 8 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று பாபர் ஆஸம் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கோலியின் 41 மாத இராச்சியத்திற்கு பாபர் ஆஸம் முடிவு கட்டியுள்ளார்.
19 வயதுக்கான கிரிக்கெட் போட்டியில் 2010 முதல் 2012ஆம் ஆண்டுவரை நட்சத்திர வீரராக ஜொலித்த பாபர் ஆஸம் 2015ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிக்கு அறிமுகமானார். தென்னாபிரிக்காவுக்கு எதிராகத் தற்போது தொடரைத் தொடங்கும்போது பாபர் ஆஸம் 837 புள்ளிகளில் இருந்தார். தற்போது 865 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் பாபர் ஆஸம் தற்போது 6வது இடத்திலும், டி20 போட்டிக்கான தரவரிசையில் 3வது இடத்திலும் உள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு துடுப்பாட்ட வீரர் ஃபக்கர் ஜமான், 778 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். .
பாகிஸ்தான் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஷீகான் அப்ரிடி 4 இடங்கள் முன்னேறி 11வது இடத்தைப் பிடித்துள்ளார். இடதுகை சுழற்பந்துவீச்சாளர் முகமது நவாஸ் 96வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்திய அணியின் துணை கப்டன் ரோஹித் சர்மா 825 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ரோஸ் டெய்லர் 4வது இடத்திலும் உள்ளனர்.
தொடர்ந்து ஆரோன் பின்ஞ், பரிஷ்ஷோ, ஃபக்கர் ஜமான்? டூ பிளெஸிஸ், ஹோப், வோர்னர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இலங்கையர் யாரும் ரொப் 10 இல் இல்லை.
முதலிடத்தில் நியூஸிலாந்து வீரர் டிரன்ட் போல்ட், 2வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரஹ்மான், 3வது இடத்தில் நியூஸிலாந்து வீரர் மாட் ஹென்றி, இந்திய வீரர் பும்ரா 4வது இடத்தில், 5வது இடத்தில் ரபாடா, 7வது இடத்தில் வோகஸ், 8வது இடத்தில் ஹசில்வூட், 9வது இடத்தில் பட் கம்மின்ஸ், 10வது இடத்தில் முகமட் அமீர் உள்ளனர்.
சகலதுறை வீரர்கள் பட்டியலில் பங்களாதேஷின் சஹிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார்.