தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3வது ரி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் 4 ரி 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளிடையேயான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது.
இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான ரி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகளை கொண்ட தொடரின் 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது ரி20 போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ரொஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
தென்னாபிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக மாலன் மற்றும் மார்க்ரம் ஆகியோர் களமிறங்கினர். இரு வீரர்களும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர்.
31 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 63 ரன்கள் குவித்த மார்க்ரம், முகமது நவாஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஜோர்ஜ் லிண்டி 22 ரன்களில் வெளியேறினார். 40 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 55 ரன்கள் குவித்திருந்த மாலனின் விக்கெட்டை முகமது நவாஸ் வீழ்த்தினார். அடுத்துவந்த வென் டெர் டஸ்சன் அதிரடியாக ஆடினார். அவர் 20 பந்துகளில் 2 சிக்சர்கள் உள்பட 34 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த தென்னாபிரிக்க அணி 203 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகமது ரிஸ்வான் மற்றும் கப்டன் பாபர் ஆஸம் களமிறங்கினர்.
தொடக்கம் முதலே இரு வீரர்களும் அதிரடியாக ஆடினார். குறிப்பாக, கப்டன் பாபர் ஆஸம் தென்னாபிரிக்க வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்தார். அவர் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதேபோல் முகமது ரிஸ்வான் 32 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து இரு வீரர்களும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பாபர் ஆஸம் 49 பந்துகளில் சதம் விளாசினார். 59 பந்துகளில் 15 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 122 ரன்கள் குவித்து, வெற்றிக்கு மிக அருகாக வந்த நிலையில் வில்லியம்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் அணி 17.4 ஓவரில் 197 ரன்கள் குவித்திருந்தது. 14 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அடுத்து களமிறங்கிய ஃபகர் ஜமான் 2 பந்துகளில் 2 பவுண்டரிகள் விளாசினார்.
இதனால், 2 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்து தென்னாபிரிக்க அணியை வீழ்த்தியது.
பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 47 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த நிலையிலும், ஃபகர் ஜமான் 2 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையிலும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது.
59 பந்துகளில் 122 ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணியின் கப்டன் பாபர் ஆஸம் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இரு அணிகளும் மோதும் கடைசி ரி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.