திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (31). பார்வைக்குறைபாடுள்ள மனோகரன், ஜூடோ விளையாட்டு வீரர் ஆவார். இவர் பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான தகுதிச்சுற்றுக்குத் தேர்வாகி உள்ளார். ஆனால், போதிய பணம் இல்லாததால் தகுதிச்சுற்றில் அவர் கலந்து கொள்வது கேள்விக்குறியாகியுள்ளது.
பாராலிம்பிக்ஸ் போட்டிக்கான தகுதிச்சுற்று வரும் மே 23-ம் தேதி, துருக்கி நாட்டில் உள்ள அந்தல்யா நகரில் நடைபெற உள்ளது. இந்தச் தகுதிச்சுற்றில் கலந்துகொள்ள பயணச்செலவு உட்பட விளையாட்டு அமைப்புக்கு ஏப்ரல் 15-ம் தேதிக்குள் ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். வறுமையான குடும்பப் பின்புலத்தைக் கொண்டவரான மனோகரன், இந்தத் தொகையை கட்ட முடியாமல் திணறி வருகிறார்.
பாராலிம்பிக்ஸ் போட்டியானது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஆகஸ்ட் 24ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான தகுதிச்சுற்றுக்கு ஜூடோ பிரிவில் இந்திய அளவில் 4 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மனோகரின் அப்பா தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். தற்போது உடல்நடலக் குறைவால் வேலையை தொடர முடியாமல் வீட்டில் இருக்கிறார். அம்மா காலைஉணவுகள் சமைத்து விற்று வருகிறார். பிறவியிலேயே பார்வைக்குறைபாடு உடையவரான மனோகரன் தன்னுடைய 20வது வயதிலிருந்து ஜூடோ விளையாடி வருகிறார். தேசிய அளவிலான போட்டிகளில் 7 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2014ம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம், 2016ம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற காமென்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம், 2019ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற காமென்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
தங்கம் வெல்வதே இலக்கு
மனோகரன் கூறும்போது, “எனக்கு ஜூடோதான் வாழ்க்கை. பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்றாக வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறேன். 8 ஆண்டுகளாக பாராலிம்பிக்ஸுக்காக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரையில் போட்டியில் கலந்துகொள்வதற்கான எல்லா செலவினங்களையும் நண்பர்களும், சிலதன்னார்வ தொண்டு நிறுவனங்களுமே கவனித்துக்கொண்டன. இந்த முறை, இறுதி நேரத்தில்தான் தகுதிச்சுற்றுக்கு தேர்வானவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதனால், பணம் திரட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது” என்றார்.