இந்த நாட்டில் என்ன நடக்கும் எப்போது நடக்கும் என்று எவருக்கும் தெரியாத, அச்சமான சூழலை அரசு ஏற்ப்படுத்தியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் தெரிவித்தார்.
வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் பல்வேறு கிராமங்களிற்கு பயணம் செய்து மக்களை சந்தித்தார்.
இதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எப்படியாவது என்னை சிறையிலே அடைக்கவேண்டும் என்று எத்தனையோ பொய்குற்றச்சாட்டுக்கள் முறைப்பாடுகளை செய்தும் பலன் கிடைக்காதபோது, மன்னாருக்கு வாக்களர்களை பேருந்தில் அழைத்துச்சென்ற விடயத்தை முன்னிறுத்தி என்னை சிறையிலேயே அடைத்தார்கள்.
அதன்பிறகும் தொடர்ச்சியான சதிகளை இந்த அரசு செய்து கொண்டேயிருக்கின்றது. குறிப்பாக கொவிட் தொற்றுநோயினால் இறப்பவர்களின் சடலங்களை பலவந்தமாக எரிக்கும் சதியினை இந்த அரசாங்கம் செய்தது. எமது கருத்துக்களையும், மக்களின் வேதனைகளையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.
ஜெனிவாவால் அந்த விடயம் இடைநிறுத்தப்பட்டது.
அதன்பிறகு சிறுபான்மை சமூகம் சார்ந்து பேசுபவர்களின் குரல்களை நசுக்கும். சதி நடந்துகொண்டிருக்கின்றது. கடந்த மாதம் அசாத்சாலியை கைதுசெய்யதார்கள். அதேபோல அரசாங்கத்தின் பிழையான நடவடிக்கைகளை எதிர்த்துப்பேசுகின்ற அசல சம்பத் என்கின்ற சிவில் அமைப்பை சேர்ந்தவரை கைதுசெய்திருப்பதாக அறிகிறேன்.
இந்த நாட்டில் என்ன நடக்கும் எப்போது நடக்கும் யாருக்கு நடக்கும்? என்ன செய்வார்கள் என்பது தெரியாது. அனைவரும் ஒரு பயந்த சுபாவத்தோடு வாழவேண்டும் என்று இந்த அரசு அச்சத்திலே வைத்திருக்கின்றது. கொழும்பைவிட்டு செல்லமுடியாத அளவிற்கு பலவகையான தொல்லைகள் எங்களிற்கு வழங்கப்பட்டது.
அந்தவகையில் நான் சிறையில் இருந்தபோது எனக்காக மன்றாடிய அனைத்து மக்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக, கடமைப்பட்டுள்ளேன் என்றார்.